அடுத்தடுத்து ஆட்டமிழந்த ஷுப்மன், ரோஹித், ஸ்ரேயாஸ்; ரஷிகர்கள் ஷாக்!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்துவரும் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் முன்னேறின. அதன்படி இன்று அஹ்மதாபாத்திலுள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்த இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி இந்திய அணிக்கு ஷுப்மன் கில் - ரோஹித் சர்மா இணை தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் வழக்கம் போல ரோஹித் சர்மா அதிரடி ஆட்டம் ஆடத் தொடங்கினார். ஆனால், ஆஸ்திரேலிய அணி பீல்டிங்கில் துடிப்பாக இருந்தது. முதல் மூன்று ஓவர்களில் மட்டும் ஐந்து பவுண்டரிகளை தடுத்து மிரட்டியது. இந்த சூழ்நிலையிலும் ரோஹித் சர்மா பவுண்டரிகளை அடித்து நம்பிக்கை அளித்தார்.
Trending
இதுவரை நடந்த போட்டிகளைப் போல, ஒருபுறம் ஷுப்மன் கில் நிலைத்து நின்று ஆட, ரோஹித் சர்மா அதிரடி ஆட்டம் ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஷுப்மன் கில் 7 பந்துகளில் 4 ரன்கள் மட்டுமே எடுத்து கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஷார்ட் பந்தை தன் வழக்கமான ஷாட் மூலம் பவுண்டரியாக மாற்ற முயற்சி செய்து இருந்தார் ஷுப்மன் கில். ஆனால் அந்த முயற்சியில் தோல்வி அடைந்து அவர் ஆடம் ஸாம்பாவிடம் கேட்ச் கொடுத்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.
அதன்பின் பின் ரோஹித் சர்மா - விராட் கோலி அதிரடி ஆட்டம் விளையாடி ஆஸ்திரேலியாவை மிரட்டினர். பின் இப்போட்டியில் பெரிய ஸ்கோரை அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் சர்மா 31 பந்துகளில் 4 பவுண்டரி, 3 சிக்சர்கள்ள் என 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து மீண்டும் அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட, அடுத்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயரும் வெறும் 4 ரன்னில் விக்கெட்டை இழந்து இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சிக் கொடுத்தார்.
இதனால் இந்திய அணி 81 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது. அதன்பின் இணைந்துள்ள நட்சத்திர வீரர்கள் விராட் கோலி - கேஎல் ராகுல் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தி வருகின்றனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க், கிளென் மேக்ஸ்வெல், பாட் கம்மின்ஸ் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர்.
Win Big, Make Your Cricket Tales Now