
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 3ஆவது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற இரண்டாவது லீக் போட்டியில் முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் மகளிர் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. வதோதராவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு யஷ்திகா பாட்டியா மற்றும் ஹீலி மேத்யூஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஹீலி மேத்யூஸ் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து 11 ரன்கள் எடுத்திருந்த நிலையில் யஷ்திகா பாட்டியாவும் தனது விக்கெட்டை இழந்தார். இதனால் அந்த அணி 32 ரன்களில் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் ஜோடி சேர்ந்த நாட் ஸ்கைவர் பிரண்ட் மற்றும் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர்.
இருவரும் அதிரடியாக விளையாடிய நிலையில் அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் நாட் ஸ்கைவர் பிரண்ட் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இதன்மூலம் இருவரின் பார்ட்னர்ஷிப்பும் 70 ரன்களைத் தாண்டிய நிலையில், அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஹர்மன்பிரீத் கவுர் 4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 42 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய அமெலியா கெர் 9 ரன்களுக்கும், சஜீவான் சாஜனா ஒரு ரன்னிலும், அமஞ்ஜோத் கௌர் 7 ரன்னிலும், சமஸ்கிருதி குப்தா ஒரு ரன்னிலும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தார்.