WPL 2025: தொடரிலிருந்து விலகிய ஸ்ரெயங்கா பாட்டில்; ஆர்சிபி அணியில் ஸ்நே ரானா சேர்ப்பு!
காயம் காரணமாக நடப்பு டபிள்யூபிஎல் தொடரில் இருந்து ஸ்ரேயங்கா பாட்டில் விலகியதை அடுத்து, அவருக்கு பதிலாக ஸ்நே ரானாவை ஆர்சிபி அணி ஒப்பந்தம் செய்துள்ளது.

மகளிர் பிரீமியர் லீக் தொடரின் மூன்றாவது சீசன் நேற்று கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியனான ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நடப்பு சீசனின் முதல் போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், இத்தொடரையும் வெற்றியுடன் தொடங்கியுள்ளது.
மகளிர் பிரீமியர் லீக் 2025க்கு முன்னதாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரூ அணியின் நட்சத்திர வீராங்கனைகள் சோஃபி டிவைன், கேட் கிராஸ் ஆகியோர் தனிப்பட்ட காரணங்களால் விலகினர். இதனையடுத்து அவர்களுக்கான மாற்று வீராங்கனைகளாக ஆஸ்திரேலிய அணியைச் சேர்ந்த ஹீதர் கிரஹாம் மற்றும் கிம் கார்த் ஆகியோரை ஆர்சிபி அணி ஒப்பந்தம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Also Read
இந்நிலையில் தற்போது ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு மேலும் ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதன்படி அந்த அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்ரேயங்கா பாட்டில் காயம் காரணமாக நடப்பு மகளிர் பிரீமியர் லீக் தொடரில் இருந்து விலகியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்சிபி அணியின் முக்கிய வீராங்கனையாக பார்க்கப்பட்ட ஸ்ரெயங்கா பாட்டில் அந்த அணிக்காக 15 போட்டிகளில் விளையாடி 19 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
மேற்கொண்டு கடந்தாண்டு டபில்யூபிஎல் தொடரில் 8 போட்டிகளில் விளையாடிய அவர் 13 விக்கெட்டுகளை கைப்பற்றி அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீராங்கனை எனும் பெருமையைப் பெற்றதுடன், ஆர்சிபி அணி சாம்பியன் பட்டத்தை வெல்வதற்கும் முக்கிய காரணமாக அமைந்திருந்தார். இந்நிலையில் ஸ்ரெயங்கா பாட்டில் இத்தொடரில் இருந்து விலகியுள்ளது அந்த அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அவருக்கு பதிலாக மற்றொரு இந்திய வீராங்கனையான ஸ்நே ரானாவை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஒப்பந்தம் செய்துள்ளது. அவரை ஆர்சிபி அணியானது ரூ.30 லட்சத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக குஜராத் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஸ்நே ரானா நடப்பு வீராங்கனைகள் ஏலத்திற்கு முன்னதாக அணியில் இருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: Funding To Save Test Cricket
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி: ஸ்மிருதி மந்தனா, எல்லிஸ் பெர்ரி, ரேணுகா சிங், ரிச்சா கோஷ், ஸ்நே ரானா, கனிகா அஹுஜா, ஆஷா ஷோபனா, ஜார்ஜியா வேர்ஹாம், ஏக்தா பிஷ்ட், எஸ் மேக்னா, சோஃபி மோலினக்ஸ், டான் மோலினக்ஸ், பிரேமா ராவத், ஜோஷிதா விஜே, ராகவி பிஷ்ட், ஜாக்ரவி பவார், கிம் கார்த், ஹீதர் கிரஹாம்.
Win Big, Make Your Cricket Tales Now