WTC Final, Day 3: ரட்சகனாக மாறிய மிட்செல் ஸ்டார்க்; தென் அப்பிரிக்காவுக்கு 282 டார்கெட்!
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணிக்கு 282 ரன்களை ஆஸ்திரேலிய அணி இலக்காக நிர்ணயித்துள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷி 2025: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இறுதிப்போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வந்த நிலையில், மிட்செல் ஸ்டார்க் அரைசதம் கடந்து அணியை கரை சேர்த்துள்ளார்.
லார்ட்ஸ் கிரிக்கெட் மைதனத்தில் நடைபெற்று வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி சுவாரஸ்யத்திற்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 212 ரன்களையும், தென் ஆப்பிரிக்க அணி 138 ரன்னிலும் என ஆல் அவுட்டானது. இதையடுத்து 74 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய ஆஸ்திரேலிய அணியில் மீண்டும் நட்சத்திர வீரர்கள் சோபிக்க தவறினர்.
இதில் உஸ்மான் கவாஜா 6 ரன்களுக்கும், கேமரூன் க்ரீன் ரன்கள் ஏதுமின்றியும், நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய மார்னஸ் லபுஷாக்னே 22 ரன்களிலும், ஸ்டீவ் ஸ்மித் 12 ரன்கள், டிராவிஸ் ஹெட் 9 ரன்கள், பியூ வெப்ஸ்டர் 9 ரன்கள், கேப்டன் பாட் கம்மின்ஸ் 6 ரன்கள் என வந்த வேகத்தில் நடையைக் கட்டினர். பின்னர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அலெக்ஸ் கேரியும் 5 பவுண்டரிகளுடன் 43 ரன்களை எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.
இதன் காரணமாக ஆஸ்திரேலிய அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்களை மட்டுமே சேர்திருந்தது. இதையடுத்து இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தை மிட்செல் ஸ்டார்க் 16 ரன்களுடனும், நாதன் லையன் ஒரு ரன்னுடனும் தொடர்ந்தனர். இதில் நாதன் லையன் 2 ரன்களை மட்டுமே எடுத்த கையோடு விக்கெட்டை இழந்தார். பின்னர் இணைந்த மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் இணை பொறுப்புடன் விளையாடி விக்கெட் இழப்பை தடுத்தனர்.
இதில் அபாரமாக விளையாடிய மிட்செல் ஸ்டார்க் தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்தார். இதன்மூலம் இருவரின் பார்ட்னர்ஷ்ப்பும் 50 ரன்களை கடந்தது. அதன்பின் 17 ரன்கள் எடுத்த நிலையில் ஹேசில்வுட் விக்கெட்டை இழக்க, ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 207 ரன்களில் ஆல் அவுட்டானது. இதில் இறுதிவரை களத்தில் இருந்த மிட்செல் ஸ்டார்க் 5 பவுண்டரிகளுடன் 58 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
Also Read: LIVE Cricket Score
தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் காகிசோ ரபாடா 4 விக்கெட்டுகளையும், லுங்கி இங்கிடி 3 விக்கெட்டுகளையும், மார்கோ ஜான்சென், வியான் முல்டர் மற்றும் ஐடன் மார்க்ரம் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இதனையடுத்து 282 ரன்கள் என்ற இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்க அணி இன்னிங்ஸைத் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now