
இந்தியாவின் பாரம்பரியமிக்க உள்ளூர் போட்டியான ரஞ்சி கோப்பை தொடரின் 2024-25 சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் காலிறுதிச்சுற்றின் முடிவில் மும்பை, விதர்பா, கேரளா மற்றும் குஜராத் உள்ளிட்ட அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இதனையடுத்து இத்தொடரின் அரையிறுதி போட்டிகள் பிப்ரவரி 17ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளன.
இதில் முதல் அரையிறுதிப்போட்டியில் குஜராத் மற்றும் கேரளா அணிகளும், இரண்டாவது அரையிறுதி போட்டியில் மும்பை மற்றும் விதர்பா அணிகளும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இந்நிலையில் அரையிறுதி போட்டிக்கான மும்பை அணியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஷிவம் தூபே உள்ளிட்டோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் மும்பை அணியின் பேட்டிங் வலிமை பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று நாக்பூரில் நடந்த மும்பை அணியின் பயிற்சி அமர்வில் அவர் களமிறங்கினார், ஆனால் வலைகளில் பேட்டிங் செய்யும்போது அசௌகரியத்தை உணர்ந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக விதர்பா அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் விளையாட மாட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.