
இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி வரும் 25ஆம் தேதி ஹைதராபாத்தில் தொடங்கவுள்ளது. மேலும் இத்தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் அங்கமாக இருப்பதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
முன்னதாக இந்திய அணி இங்கிலாந்து அணிக்கெதிராக கடந்த 2016/17ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 4-0 என்ற கணக்கிலும், 2020/21 காலக்கட்டத்தில் 3-1 என்ற கணக்கிலும் தொடரைக் கைப்பற்றி அசத்தியது. இதனால் இத்தொடரிலும் இந்திய அணி தனது ஆதிக்கத்தை செலுத்தி இங்கிலாந்து அணியை வீழ்த்தும் முனைப்புடன் களமிறங்கவுள்ளது.
இந்நிலையில், இத்தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ள இளம் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்திய சூழ்நிலைகளில் தன்னை எளிதாக தயார்படுத்திக் கொள்வார் என்றும், ஸ்ரேயாஸ் ஐயர் உலகக்கோப்பையில் அசத்தியதைப் போன்று இத்தொடரிலும் சிறப்பாக விளையாடுவார் என்றும் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.