ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நாளை தொடங்க இருக்கும் நிலையில் உலகக் கோப்பையில் கலந்து கொள்ளும் 10 அணிகளின் கேப்டன்களின் சந்திப்பு இன்று நடைபெற்றது. குஜராத்தில் இன்று மாலை நடைபெற இருக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளின் தொடக்க விழாவை முன்னிட்டு கலந்து கொள்ளும் 10 கேப்டன்களும் அஹ்மதாபாத் வந்துள்ளனர்.
இவர்களுக்கான பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் கலந்துரையாடல் இன்று நடைபெற்றது. இதில் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு கேப்டன்கள் பதிலளித்தனர். இந்த நிகழ்ச்சியை ரவி சாஸ்திரி மற்றும் இயான் மோர்கன் ஆகியோர் தொகுத்து வழங்கினார். சமூக ஊடகங்களின் மூலமாகவும் நேரலையில் இந்த சந்திப்பு ஒளிபரப்பு செய்யப்பட்டது .
இதில் கலந்துகொண்டு பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா உலகக்கோப்பையில் இந்தியாவை வழி நடத்துவது மிகவும் பெருமையான ஒரு தருணம் என தெரிவித்தார். அதுவும் இந்தியாவில் நடைபெற இருக்கும் உலகக் கோப்பை போட்டிகளுக்கு கேப்டனாக இருப்பது மிகவும் அதிர்ஷ்டமான ஒன்று என்று குறிப்பிட்ட அவர் இந்திய அணியை வழிநடத்துவது எல்லாருக்கும் கிடைத்து விடாத ஒன்று எனவும் தெரிவித்தார்.