
தமிழக கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கடந்த 2010ஆம் ஆண்டு இந்தியாவுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் அசத்திய காரணத்தால் தோனி தலைமையில் இந்தியாவுக்காகவும் அறிமுகமான அவர் குறுகிய காலத்திலேயே நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி ஹர்பஜன் சிங்கை பின்னுக்கு தள்ளி 3 வகையான கிரிக்கெட்டிலும் முதன்மை ஸ்பின்னராக உருவெடுத்தார்.
குறிப்பாக 2011 உலகக் கோப்பை வெற்றியில் தன்னுடைய பங்காற்றிய அவர், 2013 சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டியில் கடைசி ஓவரை கச்சிதமாக வீசி இந்தியா கோப்பையை வெல்வதற்கு உதவியதை மறக்க முடியாது. அதே போல டெஸ்ட் கிரிக்கெட்டிலும் நிறைய விக்கெட்டுகளை எடுத்த அவர் தவிர்க்க முடியாத வீரராக அணியில் வலம் வந்தார்.
இருப்பினும் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் தோனி கேப்டன்ஷிப் பதவி விலகிய 2017க்குப்பின் புதிய கேப்டனாக பொறுப்பேற்ற விராட் கோலி அவருக்கு பெரிய ஆதரவை கொடுக்காமல் கழற்றி விட்டார். இதனால் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டின் கேரியர் முடிந்ததாக கருதப்பட்டாலும் தொடர்ந்து ஐபிஎல் தொடரில் போராடி வந்த அஸ்வினுக்கு 2021, 2022 டி20 உலகக் கோப்பையில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது.