
சர்வதேச கிரிக்கெட்டில் 2023 காலண்டர் வருடத்தில் இந்திய கிரிக்கெட் அணி ஐசிசி தொடர்களை தவிர்த்து எஞ்சிய போட்டிகளில் மிகச் சிறப்பாக செயல்பட்டது என்றே சொல்லலாம். ஏனெனில் 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் லீக் சுற்றில் அபாரமாக விளையாடிய இந்தியா லண்டன் ஓவலில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் சுமாராக செயல்பட்டு கோப்பையை கோட்டை விட்டது.
அதை விட சொந்த மண்ணில் நடைபெற்ற 2023 உலகக் கோப்பையில் தொடர்ந்து 10 வெற்றிகளை பதிவு செய்து எதிரணிகளை மிரட்டிய இந்தியா, மீண்டும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் பேட்டிங்கில் சுமாராக விளையாடிய தோல்வியை சந்தித்தது ரசிகர்களின் நெஞ்சங்களை உடைத்தது.
இதை தொடர்ந்து 2024 டி20 உலகக் கோப்பையை வெல்லும் பயணத்தை தொடங்கியுள்ள இந்தியா அதற்காக நடைபெற்று முடிந்த ஆஸ்திரேலிய தொடரை 4 – 1 என்ற கணக்கில் வென்று தென் ஆப்பிரிக்க தொடரை 1 – 1 என்ற கணக்கில் சமன் செய்தது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்க மண்ணில் நடைபெறவுள்ள 2024 டி20 உலகக் கோப்பையை இந்தியா வெல்லும் என்ற நம்பிக்கையுடன் மீண்டும் ரசிகர்கள் காத்திருக்க தொடங்கியுள்ளனர்.