ZIM vs IND, 1st T20I: அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜிம்பாப்வே; போராடி வீழ்ந்தது இந்தியா!
இந்திய அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணியானது 13 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது .
ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணியானது ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயாம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி இன்று நடைபெற்றது. ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஷுப்மன் கில் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். மேலும் இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் அபிஷேக் சர்மா, ரியான் பராக் மற்றும் துருவ் ஜுரேல் உள்ளிட்ட அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து களமிறங்கிய ஜிம்பாப்வே அணிக்கு இன்னசெண்ட் கையா மற்றும் வெஸ்லி மதேவெரா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இன்னசெண்ட் கையா முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அதன்பின் மதேவெராவுடன் இணைந்த பிரையன் பென்னெட் ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினார். இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 36 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் 23 ரன்களில் பிரையன் பென்னெட்டும், 21 ரன்களில் வெஸ்லி மதேவெராவும் விக்கெட்டை இழந்தனர்.
அதனைத்தொடர்ந்து இணைந்த கேப்டன் சிக்கந்தர் ரஸா மற்றும் தியான் மேயர்ஸ் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் உயரத்தொடங்கியது. இதில் அதிரடியாக விளையாட முயற்சித்த கேப்டன் சிக்கந்தர் ரஸா 17 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஜானதன் காம்பெல் முதல் பந்திலேயே ரன் அவுட்டாகி பெவிலியனுக்கு நடையைக் கட்ட, ஜிம்பாப்வே அணியானது 74 ரன்களில் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின்னர் தியான் மெயர்ஸும் 23 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய வெலிங்டன் மஸகட்ஸாவும் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்தார்.
Trending
அதனைத்தொடர்ந்து லுக் ஜோங்க்வா மற்றும் பிளெஸ்ஸிங் முசரபானி ஆகியோரும் ரவி பிஷ்னோய் பந்துவீச்சில் அடுத்தடுத்த பந்துகளில் விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். இருப்பினும் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கிளைவ் மடாண்டே 4 பவுண்டரிகளுடன் 29 ரன்களைச் சேர்த்து அணிக்கு உதவினார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் ஜிம்பாப்வே அணியானது 9 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்களைச் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ரவி பிஷ்னோய் 4 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
அதன்பின் எளிய இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணிக்கு கேப்டன் ஷுப்மன் கில், அறிமுக வீரர் அபிஷேக் சர்மா ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அபிஷேக் சர்மா ரன்கள் ஏதுமின்றி முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய நட்சத்திர வீரர் ருதுராஜ் கெய்க்வாட் 7 ரன்களுக்கும், அடுத்து களமிறங்கிய அறிமுக வீரர் ரியான் பராக் 2 ரன்களுக்கும், பின்னர் களமிறங்கிய ரிங்கு சிங் ரன்கள் ஏதுமின்றியும், மற்றொரு அறிமுக வீரர் துருவ் ஜுரெல் 6 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர்.
இதனால் இந்திய அணி 43 ரன்களில் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் ஷுப்மன் கில் 31 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சிக்கந்தர் ரஸா பந்துவீச்சில் க்ளீன் போல்டாகினார். இதனையடுத்து களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர் ஒருபக்கம் தடுத்து விளையாட, மறுமுனையில் களமிறங்கிய ரவி பிஷ்னோய் 9 ரன்களிலும், அதிரடியாக விளையாடிய ஆவேஷ் கான் 3 பவுண்டரிகளுடன் 16 ரன்களிலும், அடுத்து வந்த முகேஷ் குமார் ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க இந்திய அணியின் தோல்வியும் உறுதியானது.
Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy
ஆனாலும் மறுபக்கம் நம்பிக்கையை இழக்காத வாஷிங்டன் சுந்தர் இறுதிவரை போராடி அணிக்கு நம்பிக்கை அளித்தாலும் 27 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். இதன்மூலம் இந்திய அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 102 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜிம்பாப்வே தரப்பில் கேப்டன் சிக்கந்தர் ரஸா மற்றும் டெண்டாய் சடாரா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன்மூலம் ஜிம்பாப்வே அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையும் பெற்றுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now