
ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியானது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலாவது போட்டியில் ஜிம்பாப்வே அணியும், இரண்டாவது போட்டியில் இந்திய அணியும் வெற்றியைப் பதிவுசெய்து டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் தொடரை சமனில் வைத்துள்ளனர். இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டியானது இன்று ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஷுப்மன் கில் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.
அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ஷுப்மன் கில் - யஷஸ்வி ஜெய்ஸ்வால் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் இணைந்து முதல் ஓவரில் இருந்தே பவுண்டரியும், சிக்ஸர்களையும் பறக்கவிட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய இருவரும் முதல் விக்கெட்டிற்கு 67 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். அதன்பின் அபாரமாக விளையாடி வந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் இப்போட்டியில் தனது அரைசதத்தை பதிவுசெய்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 36 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
அவரைத்தொடர்ந்து களமிறங்கிய அபிஷேக் சர்மாவும் அதிரடியாக விளையாடும் முயற்சியில் 10 ரன்களை மட்டுமே எடுத்து விக்கெட்டை இழந்தார். இதனையடுத்து ஷுப்மன் கில்லுடன் இணைந்த ருதுராஜ் கெய்க்வாட் பொறுப்புடன் விளையாடி அணியின் விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினார். மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஷுப்மன் கில்லும் கேப்டனாக தனது முதல் அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இதன்மூலம் இருவரது பார்ட்னர்ஷிப்பும் 70 ரன்களைக் கடந்தது. அதன்பின் 7 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 66 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஷுப்மன் கில் விக்கெட்டை இழந்தார்.