
முகமது ரிஸ்வான் தலைமையிலான பாகிஸ்தான் அணி சமீபத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடியது. இதில் ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி வென்ற நிலையில், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை ஆஸ்திரேலிய அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி பாகிஸ்தனை ஒயிட்வாஷ் செய்தது.
இதனைத்தொடர்ந்து ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்யும் பாகிஸ்தான் அணி அங்கும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் டி20 தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரானது நவம்பர் 24ஆம் தேதி முதலும், டி20 தொடரானது டிசம்பர் 1ஆம் தேதி முதலும் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் கடந்த மாதமே அறிவித்திருந்தது.
அதன்படி ஆஸ்திரேலிய ஒருநாள் மற்றும்டி20 தொடரில் விளையாடிய பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர்கள் பாபர் ஆசாம், நசீம் ஷான், ஷாஹீன் அஃப்ரிடி ஆகியோர் ஜிம்பாப்வே தொடர்களில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஜிம்பாப்வே ஒருநாள் மற்றும் டி20 அணியை ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.