
Zimbabwe T20I Tri-Series: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி கேப்டன் சிக்கந்தர் ரஸா தனது அரைசதத்தைப் பதிவுசெய்ததுடன் அணியை சரிவிலிருந்தும் மீட்டெடுத்துள்ளார்.
தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகள் ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயண் செய்து அந்த அணியுடன் முத்தரப்பு டி20 தொடரில் விளையாடி வருகின்றன. இதில் இன்று நடைபெற்ற முதல் லீக் போட்டியில் ஜிம்பாப்வே மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய ஜிம்பாப்வே அணிக்கு வெஸ்லி மதவெரே மற்றும் பிரையன் பென்னட் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் மதவெரே ஒரு ரன்னிலும், அடுத்து களமிறங்கிய கிளைவ் மடான்டே 8 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். அதன்பின் பிரையன் பென்னட்டுடன் இணைந்த கேப்டன் சிக்கந்தர் ரஸா அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் பிரையன் பென்னட் 30 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ரியான் பார்லும் தனது பங்கிற்கு 3 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர்கள் என 29 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்த நிலையிலும் மறுமுனையில் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய சிக்கந்தர் ரஸா தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார்.