Advertisement

உலகக்கோப்பை 2023: கோப்பையை தக்க வைக்குமா இங்கிலாந்து?

நடக்கவிருக்கும் ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்வுள்ள ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியின் பலம் மற்றும் பலவீனம் குறித்து இப்பதிவில் பார்ப்போம்..

Bharathi Kannan
By Bharathi Kannan September 30, 2023 • 20:04 PM
உலகக்கோப்பை 2023: கோப்பையை தக்க வைக்குமா இங்கிலாந்து?
உலகக்கோப்பை 2023: கோப்பையை தக்க வைக்குமா இங்கிலாந்து? (Image Source: Google)
Advertisement

கிரிக்கெட் ரசிகர்களின் ஒட்டுமொத்த கவனமும் தற்போது இந்தியாவில் நடைபெறவுள்ள ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் பக்கம் திரும்பியுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி கோப்பையை வென்று புதிய சாம்பியனாக திகழும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  

இதில்சொந்த மண்ணில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும் அதற்கு பெரிய சவாலை கொடுக்கும் எதிரணிகளில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து முதன்மையானதாக திகழ்கிறது என்றே சொல்லலாம். ஏனெனில் 2017 வரை தடுமாறிக் கொண்டிருந்த அந்த அணியை இயன் மோர்கன் புதிய கேப்டனாக பொறுப்பேற்று ஜோஸ் பட்லர், மொயின் அலி போன்ற அதிரடியாக விளையாடும் வீரர்களை தேடி கண்டறிந்து வாய்ப்புகளை கொடுத்து வளர்த்தார்.

Trending


அதன் பயனாக அதிரடி படையாக மாறிய இங்கிலாந்து தொடர்ந்து 300 – 400 ரன்களை குவிக்கும் மிரட்டலான அணியாக உருவெடுத்தது. அதே வேகத்தில் 2019 உலகக்கோப்பையை சொந்த மண்ணில் வென்ற அந்த அணி அதன் பின்பும் தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 2022 டி20 உலகக் கோப்பையை வென்றது. இந்நிலையில் தற்போது மீண்டும் கோப்பையை வெல்லும் முனைப்புடன் அந்த அணி இத்தொடரை எதிர்கொள்ளயுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து அணியின் பலம் மற்றும் பலவீனம் குறித்து இப்பதிவில் பார்ப்போம்..

இங்கிலாந்து அணியின் பலம்

நடப்பு உலகக்கோப்பை தொடருக்கான இங்கிலாந்து அணியை அனுபவ அதிரடி வீரர் ஜோஸ் பட்லர் வழிநடத்தவுள்ளார். இந்த அணியில் சுமாரான ஃபார்மில் தவித்த ஜேசன் ராயை கழற்றி விட்டுள்ள இங்கிலாந்து டேவிட் மாலனை சேர்த்துள்ளதால் ஓப்பனிங் ஜோடி வலுவானதாகவே இருக்கிறது. அவர்களுடன் ஜானி பேர்ஸ்டோவ் டாப் ஆர்டரில் அடித்து நொறுக்கும் திறமை கொண்டவராக இருக்கும் நிலையில் மிடில் ஆர்டரில் இங்கிலாந்தின் நம்பிக்கை நட்சத்திரம் ஜோ ரூட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

தற்போது சற்று சுமாரான ஃபார்மில் இருந்தாலும் விராட் கோலிக்கு நிகரான கிளாஸ் நிறைந்த அவர் உலகக்கோப்பை போன்ற பெரிய தொடரில் அசத்தும் திறமை கொண்டவர் என்பதில் சந்தேகமில்லை. அவருடன் பேட்டிங் துறையை வலுப்படுத்துவதற்கு நல்ல ஃபார்மில் இருக்கும் இளம் வீரர் ஹரி ப்ரூக் கடைசி நேரத்தில் சேர்க்கப்பட்டுள்ளது இங்கிலாந்து அணியை மேலும் மெருகேற்றியுள்ளது. அதை விட 2019 உலகக்கோப்பை வெல்வதற்கு முக்கிய பங்காற்றிய உலகின் நம்பர் ஒன் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் நாட்டுக்காக ஓய்வு முடிவை வாபஸ் பெற்று இந்த தொடரில் ஸ்பெஷலாக விளையாடுவது இங்கிலாந்துக்கு மிகப்பெரிய பலமாகும். 

அவரை போலவே அசத்தும் திறமை கொண்ட சாம் கரண் நல்ல ஆல் ரவுண்டராக இருக்கிறார். மேலும் சரமாரியாக அடித்து நொறுக்கும் திறமை கொண்ட லியாம் லிவிங்ஸ்டன் சுழல் பந்துகளை வீசுவார் என்பதால் இங்கிலாந்தின் ஆல் ரவுண்டர்கள் துறை மிகவும் வலுவானதாகவும் அதிரடியானதாகவும் இருக்கிறது. அதே போல மொயீன் அலி டாப் முதல் மிடில் வரை அனைத்து இடங்களிலும் விளையாடக்கூடிய அதிரடியான சுழல் பந்து வீச்சு ஆல் ரவுண்டராக இருக்கும் நிலையில், முதன்மை ஸ்பின்னரான அதில் ரசித்தும் இருப்பது அணியின் பலத்தை கூட்டியுள்ளது.

வேகப்பந்து வீச்சு துறையில் மார்க் வுட், கிறிஸ் ஓக்ஸ் ஆகியோர் 140 – 150 கி.மீ வேகத்தில் வீசக்கூடிய திறமையை கொண்டிருப்பதால் இங்கிலாந்துக்கு பிரச்சினை ஏற்படாது என்று நம்பலாம். இவர்களுடன் இடது கை பவுலராக ரீஸ் டாப்லி, கஸ் அட்கின்ஷன் போன்ற எக்ஸ்ட்ரா வீரர்களும் இங்கிலாந்து அணியை பலப்படுத்தும் நோக்கத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதனால் அந்த அணி அனைத்து துறைகளிலும் சிறந்த வீரர்களைக் கொண்டுள்ளதால் நிச்சயம் கோப்பையை தன்வசப்படுத்த போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்து அணியின் பல்வீனம்  

இங்கிலாந்து அணி வலிமையாக திகழ்ந்தாலும் கடந்த உலகக்கோப்பை தொடரில் அந்த அணி கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்த ஜோஃப்ரா ஆர்ச்சர் விளையாடாதது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் இந்திய மைதானங்களில் அவரது பந்துவீச்சு மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் அவர் இல்லாதது அந்த அணிக்கு பலவீனமாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் அவரும் இங்கிலாந்து அணியுடன் இந்தியா வந்துள்ளதால் ஆர்ச்சரை இந்த உலகக்கோப்பை தொடரில் கண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. 

மேலும் அனுபவ வீரரான ஜேசன் ராய் இல்லாமல் இங்கிலாந்து அணியின் டாப் ஆர்டர் சற்று பின்னடைவை சந்தித்துள்ளது. ஏனெனில் அவரது இடத்தில் அனுபவமில்லாத ஹாரி ப்ரூக் களமிறங்க வாய்ப்புள்ளதால் நிச்சயம் அது பின்னடவைவாக பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி சமீப காலமாக டெஸ்ட் கிரிக்கெட்டைக் கூட டி20 போல் விளையாடும் இங்கிலாந்து அணி இந்திய மன்னில் எவ்வாறு செயல்படும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

உலகக்கோப்பையில் இங்கிலாந்து அணி

  •      1975: அரையிறுதி
  •      1979: இரண்டாம் இடம்
  •      1983: அரையிறுதி சுற்று
  •      1987: இரண்டாம் இடம்
  •      1992: இரண்டாம் இடம்
  •      1996: காலிறுதி சுற்று
  •      1999: குரூப் ஸ்டேஜ்
  •      2003: குரூப் ஸ்டேஜ்
  •      2007: சூப்பர் எயிட்ஸ்
  •      2011: காலிறுதி சுற்று
  •      2015: குரூப் ஸ்டேஜ்
  •      2019: சாம்பியன்

உலகக்கோப்பை தொடருக்கான இங்கிலாந்து அணி 

டேவிட் மாலன், ஜானி பேர்ஸ்டோவ், ஜோ ரூட், ஹாரி புரூக், ஜோஸ் பட்லர்(கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டோன், பென் ஸ்டோக்ஸ், மொயீன் அலி, கிறிஸ் வோக்ஸ், சாம் கரன், டேவிட் வில்லி, ஆதில் ரஷித், கஸ் அட்கின்சன், ரீஸ் டாப்லி, மார்க் வுட்.

இங்கிலாந்து அணியின் போட்டி அட்டவணை (GMT)

  •      அக்டோபர் 05: நியூசிலாந்து, அகமதாபாத் (0830)
  •      அக்டோபர் 10: வங்கதேசம், தர்மசாலா (0500)
  •      அக்டோபர் 15: ஆஃப்கானிஸ்தான், புது டெல்லி (0830)
  •      அக்டோபர் 21: தென் ஆப்பிரிக்கா, மும்பை (0830)
  •      அக்டோபர் 26: இலங்கை, பெங்களூரு (0830)
  •      அக்டோபர் 29: இந்தியா, லக்னோ (0830)
  •      நவம்பர் 04: ஆஸ்திரேலியா, அகமதாபாத் (0830)
  •      நவம்பர் 08: நெதர்லாந்து, புனே (0830)
  •      நவம்பர் 11: பாகிஸ்தான், கொல்கத்தா (0830) 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement