டி20 உலகக்கோப்பை: இந்திய அணியின் பலம்; பலவீனம் ஓர் பார்வை!
நடப்பாண்டு டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் இருக்கும் பலம் மற்றும் பலவீனம் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ஆடவருக்கான 8ஆவது டி20 உலககோப்பை போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இத்தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சென்று, அங்கு பயிற்சி போட்டிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இத்தொடருக்கான இந்திய அணி அறிவித்தது முதலே சில நிறை, குறைகள் இருந்து வந்தது.
இதையடுத்து, இந்த வீரரை சேர்த்திருக்க வேண்டும், இந்த வீரர் 15 பேர் கொண்ட அணியில் இடம் பெற்றிருக்க வேண்டும், இவர்கள் ஏன் இல்லை என பல கேள்விகளை ரசிகர்கள், கிரிக்கெட் வல்லுநர்கள் என பலரது மத்தியில் பேசுபொருளாக மாறியது. இந்நிலையில், இந்திய அணியின் பலம், பலவீனம், வாய்ப்பு மற்றும் அச்சுறுத்தல் குறித்து விரிவாக பார்ப்போம்.
Trending
இந்திய கிரிக்கெட் அணி ஐசிசி டி20 கிரிக்கெட் அணிகளுக்கான தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. ஆசிய கோப்பை தொடரில் இந்தியா ‘சூப்பர் 4’ சுற்றோடு வெளியேறியது. அதனைக் கருத்தில் கொண்டே அணித் தேர்வை மேற்கொண்டுள்ளது பிசிசிஐ நிர்வாகம். ஆனால் இந்த அணியில் பும்ரா, ஜடேஜா இல்லாதது பலவீனமே.
இந்திய அணியின் பலம்
வழக்கம் போலவே இந்திய அணியின் முதுகெலும்பாக இருப்பது பேட்டிங் யூனிட்தான். கேப்டன் ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தினேஷ் கார்த்திக், ஹர்தில் பாண்டியா, தீபக் ஹூடா என டி20 கிரிக்கெட்டில் தடபுடலாக வானவேடிக்கை காட்டும் வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
பந்துவீச்சில் யூனிட்டில் முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங் போன்ற வீரர்கள் இருப்பது பலம். முக்கியமாக ஆஸ்திரேலியா போன்ற பவுன்ஸ் ஆகும் ஆடுகளங்களில் தரமாக பந்து வீசி விக்கெட்டுகளை வீழ்த்தும் திறன் கொண்ட அஸ்வினை அணியில் சேர்த்திருப்பது கூடுதல் பலம். ஆஸ்திரேலிய ஆடுகளத்தில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என அனைத்திலும் சேர்த்து மொத்தம் 51 விக்கெட்டுகளை அஸ்வின் எடுத்துள்ளார். அவர் ஆடும் லெவனில் இடம் பெறுவது அவசியமாகி உள்ளது.
இந்திய அணியின் பலவீனம்
காயம் காரணமாக அணியில் ஜஸ்ப்ரித் பும்ரா, ரவீந்திர ஜடேஜா, தீபக் சஹார் இடம்பெறவில்லை. அதிலும் ஜடேஜா இல்லாதது இந்திய அணிக்கும் பெரும் பிரச்சைனையே. ஏனெனில் பேட்டிங், பவுலிங் மற்றும் ஃபீல்டிங் என அனைத்திலும் மாஸ் காட்டும் வல்லமை கொண்டவர் அவர். முக்கியமாக அவர் இல்லாதது அணியில் வலது, இடது பேட்டிங் காம்பினேஷனுக்கு சிக்கலை கொடுத்துள்ளது. அவருக்கு மாற்றாக அணியில் இடம் பெற்றுள்ள அக்சர் படேலுக்கு இந்தத் தொடர் மிக முக்கியமான ஒன்றாக அமைந்துள்ளது.
மறுபக்கம் ரிஷப் பந்த். அவர் அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இடம்பெற்றுள்ளார். 58 டி20 போட்டிகளில் மொத்தம் 934 ரன்கள் எடுத்துள்ளார். அவரது பேட்டிங் சராசரி 23.95. நடப்பு ஆண்டில் இதுவரை 17 டி20 போட்டிகளில் விளையாடி வெறும் 311 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். ஜடேஜா இல்லாத காரணத்தால் இடது கை பேட்ஸ்மேன் என்ற முறையில் அவர் அணியில் விளையாடுகிறார் என தெரிகிறது. இந்திய அணி தேர்வு குழுவின் நம்பிக்கையை அவர் காப்பாற்றுகிறாரா என்பதை பொறுத்து இருந்து பார்க்க வேண்டியுள்ளது.
அதுமட்டுமில்லாமல் தற்போது பும்ரா இல்லாத காரணத்தினால் டெத் பவுலிங்கை மட்டும் இந்தியா சரி செய்துவிட்டால் பிரச்சினை இருக்காது. இந்த இடத்தில் தான் பும்ராவை இந்தியா மிஸ் செய்யும். இதே போன்று அனுபவ வீரரான புவனேஸ்வர் குமார், ஹர்சல் பட்டேல், முகமது ஷமி ஆகியோர் தங்களது முழு திறமையை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
முக்கியமாக, கேப்டன் ரோகித் சர்மா இந்தத் தொடரில் அணியில் திறம்பட வழிநடத்த வேண்டியது அவசியம். ஏனெனில் அவர் தோனி, கோலி போன்ற கேப்டன்கள் விட்டு சென்ற இடத்தை நிரப்ப சரியான சாய்ஸ் என்பது அப்போது தான் உறுதியாகும்.
ஐசிசி தொடர்களும் இந்திய அணியும்
இந்திய கிரிக்கெட் அணி ஐசிசி தொடர்களில் சரிவர சோபிப்பது கிடையாது என்ற ஒரு விவாதம் உள்ளது. கடந்த 2013 ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை வெற்றிக்கு பிறகு இந்திய அணி சரிவர ஐசிசி தொடர்களில் விளையாடுவது கிடையாது. 2014 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி, 2015ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை அரையிறுதி போட்டி, 2017 சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டி மற்றும் 2019 50 ஓவர் உலகக் கோப்பை அரையிறுதி என வரிசையாக இந்தியா தோல்விகளை தழுவியுள்ளது.
அதிலும் கடந்த 2021 டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி முதல் சுற்றோடு வெளியேறி இருந்தது. அதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய அணியின் ஆட்டம் இந்த முறை இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே ஆஸ்திரேலியாவில் உள்ளது போன்ற வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான மைதானங்களில் இந்திய அணியால் ஈடுகட்ட முடியும்.
இந்திய அணி: ரோஹித் சர்மா(கே), கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் , ரிஷப் பந்த், அக்சர் பட்டேல் ,தீபக் ஹூடா, அஸ்வின் ,சாஹல், ஹர்சல் பட்டேல், ஆர்ஸ்தீப் சிங், புவனேஸ்வர் குமார், முகமது ஷமி.
ரிசர்வ் வீரர்கள் - முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூர், ஸ்ரேயாஸ் ஐயர், ரவி பிஷ்னோய்.
Win Big, Make Your Cricket Tales Now