துருவ் ஜூரெல் சதத்தால் தப்பிய இந்திய ஏ அணி; 255 ரன்களில் ஆல் அவுட்!
தென் ஆப்பிரிக்க ஏ அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டியில் இந்திய ஏ அணி வெற்றி பெற்ற நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது அதிகாரப்பூர்வ டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள பிசிசிஐ மைதானத்தில் இன்று தொடங்கியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க ஏ அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு கேஎல் ராகுல் - அபிமன்யூ ஈஸ்வரன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பெரிதும் எதிர்பார்க்கபட்ட ஈஸ்வரன் ரன்கள் ஏதுமின்றியும், கேல் ராகுல் 19 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய சாய் சுதர்ஷன், தேவ்தத் படிக்கல் ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
பின்னர் இணைந்த கேப்டன் ரிஷப் பந்த் - துருவ் ஜூரெல் இணை சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் துருவ் ஜூரெல் ஒருபக்கம் அபாரமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்திய நிலையில், மறுபக்கம் ரிஷப் பந்த் 24 ரன்களில் நடையைக் கட்டினார். அதன்பின் களமிறங்கிய ஹர்ஷ் தூபே 14 ரன்னிலும், ஆகாஷ் தீப் ரன்கள் ஏதுமின்றியும், குல்தீப் யாதவ் 20 ரன்னிலும், முகமது சிராஜ் 15 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
Also Read: LIVE Cricket Score
ஒருப்பக்கம் விக்கெட்டுகள் சரிந்த நிலையிலும், மறுபக்கம் அபாரமாக விளையாடி வந்த துருவ் ஜூரெல் சதம் விளாசி அசத்தினார். இருப்பினும் மற்ற வீரர்கள் பெரிதளவில் சோபிக்க தவறியதன் காரணமாக இந்திய ஏ அணி 255 ரன்களில் ஆல் அவுட்டானது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து துருவ் ஜூரெல் 12 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 132 ரன்களைச் சேர்த்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் டியான் வான் வூரன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.