ENG vs IND, 1st Test: ஹெடிங்லேவில் நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பென் டக்கெட் மற்றும் ஜோ ரூட் ஆகியோரது சிறப்பான ஆட்டத்தின் மூலம் இங்கிலாந்து அணி வெற்றிபெற்று அசத்தியுள்ளது.
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஹெடிங்லேவில் உள்ள லீட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி அதிகபட்சமாக கேப்டன் ஷுப்மன் கில் 147 ரன்களையும், துணைக்கேப்டன் ரிஷப் பந்த் 134 ரன்களையும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 101 ரன்களையும் சேர்த்திருந்தனர். இதன் மூலம் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 471 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இங்கிலாந்து அணி தராப்பில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜோஷ் டங்க் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணியில் ஒல்லி போப் 106 ரன்களுடனும், சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஹாரி புரூக் 99 ரன்களிலும், பென் டக்கெட் 64 ரன்களிலும் என ஆட்டமிழக்க அந்த அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 465 ரன்களில் அல் அவுட்டானது.இந்திய அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் ஜஸ்பிரித் பும்ரா 5 விக்கெட்டுகளையும், பிரஷித் கிருஷ்ணா 3 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன் மூலம் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 6 ரன்கள் முன்னிலை பெற்றது.
பின்னர் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணியில் கேல் ராகுல் 18 பவுண்டரிகளுடன் 137 ரன்களையும், ரிஷப் பந்த் 15 பவுண்டரி 3 சிக்ஸர்களுடன் 118 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறின்ர். இதனால் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 364 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆல் அவுட்டானது. இங்கிலாந்து அணி தரப்பில் ஜோஷ் டங் மற்றும் பிரைடன் கார்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன் கரணமாக இங்கிலாந்து அணிக்கு 371 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணிக்கு பென் டக்கெட் - ஸாக் கிரௌலி இணை அபாரமான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் பென் டக்கெட் சார்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 6ஆவது சதத்தைப் பூர்த்தி செய்தார். மறுபக்கம் ஸாக் கிரௌலி அரைசதம் விளாச, இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 188 ரன்களைச் சேர்த்து அணியின் வெற்றிக்கு தேவையான அடித்தளத்தையும் அமைத்துக்கொடுத்தனர். பின் 7 பவுண்டரிகளுடன் 65 ரன்களைச் சேர்த்திருந்த ஸாக் கிரௌலி விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஒல்லி போப் 8 ரன்களுடன் நடையைக் கட்டினார்.
பின் டக்கெடுடன் இணைந்த ஜோ ரூட்டும் நிதானமாக விளையாட அணியின் ஸ்கோரும் உயர்ந்தது. இதில் பென் டக்கெட் 21 பவுண்டரி, ஒரு சிக்சர் என 149 ரன்னிலும், அடுத்த வந்த ஹாரி புரூக் ரன்கள் ஏதுமின்றியும் நடையைக் கட்டினார். இதைடடுத்து களமிறங்கிய கேப்டன் பென் ஸ்டோக்ஸும் 4 பவுண்டரிகளுடன் 33 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற பரபரப்பு தொற்றிக்கொண்டது. அதன்பின் ஜோடி சேர்ந்த ஜோ ரூட் மற்றும் ஜேமி ஸ்மித் இணை பொறுப்புடன் விளையாடி விக்கெட் இழப்பை தடுத்ததுடன், ஸ்கோரையும் உயர்த்தினர்.
Also Read: LIVE Cricket Score
இதில் ஜோ ரூட் சர்வதேச கிரிக்கெட்டில் தனது 67ஆவது அரைசதத்தைப் பூர்த்தி செய்தார். மேற்கொண்டு இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜோ ரூட் 6 பவுண்டரிகளுடன் 53 ரன்களையும், ஜேமி ஸ்மித் 4 பாவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 44 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையும் பெற்றுள்ளது.