டி20 உலகக்கோப்பை தொடருக்கான சிறந்த அணியை அறிவித்த ஐசிசி; 6 இந்திய வீரர்களுக்கு இடம்!

Updated: Mon, Jul 01 2024 12:02 IST
டி20 உலகக்கோப்பை தொடருக்கான சிறந்த அணியை அறிவித்த ஐசிசி; 6 இந்திய வீரர்களுக்கு இடம்! (Image Source: Google)

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வந்த ஒன்பதாவது ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ளது. இத்தொடரில் நடைபெற்று முடிந்த இறுதிப்போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது 7 ரன்கள் வித்தியாசத்தில் ஐடன் மார்க்ரம் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது. மேலும் இப்போட்டியின் ஆட்டநாயகனாக விராட் கோலியும், தொடர் நாயகனாக ஜஸ்பிரித் பும்ராவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

இதனையடுத்து சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய அணிக்கு உலகின் பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றது. இந்நிலையில் நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான சிறந்த பிளேயிங் லெவனை அறிவித்துள்ளது. அதன்படி ஐசிசி அறிவித்துள்ள இந்த அணியின் தொடக்க வீரர் மற்றும் கேப்டனாக இந்திய அணியின் ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியை சிறப்பாக வழிநடத்திய கையோடு, பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டதன் மூலம் ரோஹித் சர்மாவுக்கு இந்த இடத்தை ஐசிசி வழங்கியுள்ளது. 

அதேபோல் இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் ஆஃப்கானிஸ்தான் அணி அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேற பேட்டிங்கில் உறுதியாக இருந்த ரஹ்மனுல்லா குர்பாஸ் மற்றொரு தொடக்க வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேற்கொண்டு மூன்றாம் இடத்தில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் நிக்கோலஸ் பூரனும், நான்காம் இடத்தில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவையும் ஐசிசி தேர்வுசெய்துள்ளது. அணியின் ஆல் ரவுண்டர்களாக ஆஸ்திரேலிய அணியின் மார்கஸ் ஸ்டொய்னிஸ் மற்றும் இந்திய அணியின் துணைக்கேப்டனும், கோப்பையை வெல்ல முக்கியமான காரணமாக இருந்த ஹர்திக் பாண்டியாவிற்கும் இந்த அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

 

மேலும் அணியின் சுழற்பந்து வீச்சாளர்களாக ஆஃப்கானிஸ்தான் அணி கேப்டன் ரஷித் கானும், இந்திய அணியின் அக்ஸர் படேல் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், அணியின் வேகப்பந்து வீச்சாளர்களாக ஆஃப்கானிஸ்தானின் ஃபசல்ஹக் ஃபரூக்கி, இந்திய அணியின் ஜஸ்ப்ரித் பும்ராவும், ஆர்ஷ்தீப் சிங் ஆகியோரையும் ஐசிசி தேர்வுசெய்துள்ளது. முக்கியமாக ஐசிசி தேர்வு செய்துள்ள சிறந்த டி20 உலகக்கோப்பை அணியில் ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, அக்ஸர் படேல், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் அர்ஷ்தீப் சிங் என 6 வீரர்களுக்கு இடம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

ஐசிசி தேர்வு செய்த டி20 உலகக்கோப்பை சிறந்த அணி: ரோஹித் சர்மா, ரஹ்மனுல்லா குர்பாஸ், நிக்கோலஸ் பூரன், சூர்யகுமார் யாதவ், மார்கஸ் ஸ்டொய்னிஸ், ஹர்திக் பாண்டியா, ரஷித் கான், அக்ஸர் படேல், ஃபசல்ஹக் ஃபரூக்கி, அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை