இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இந்தியாவில் நடைபெற்றுவருகிறது. மேலும் ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்க ஒருசில நாள்களே உள்ள நிலையில், இத்தொடர் அதற்கான முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது. அதன்படி மொஹாலியில் நடைபெற்ற முதலாவது போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று இந்தூரில் நடைபெற்றுவருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் முதலில் பந்துவீசுவதாக அறிவித்ததார். அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட் - ஷுப்மன் கில் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அதிரடியாக தொடங்கிய ருதுராஜ் கெய்க்வாட் 8 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
அதன்பின் இணைந்த ஷுப்மன் கில் - ஸ்ரேயாஸ் ஐயர் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் அதிரடியாக தொடங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் தனது அரைசதத்தைப் பதிவுசெய்ய, அவரைத்தொடர்ந்து அதிரடி காட்டிய ஷுப்மன் கில்லும் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்ரேயாஸ் ஐயர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 3ஆவது சதத்தைப் பதிவுசெய்ய, மறுபக்கம் ஷுப்மன் கில் தனது 6ஆவது ஒருநாள் சதத்தைப் பதிவுசெய்தார். பின் 105 ரன்களில் ஸ்ரேயாஸ் ஐயரும், 104 ரன்களில் ஷுப்மன் கில்லும் என அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். இருப்பினும் இவர்கள் இருவரும் இணைந்து 200 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர்.
அதன்பின் இணைந்த கேப்டன் கேஎல் ராகுல் - இஷான் கிஷன் இணை சந்தித்த முதல் பந்திலிருந்தே பவுண்டரியும், சிக்சர்களுமாக விளாசித்தள்ளினர். இதில் அதிரடியாக விளையாடி வந்த இஷான் கிஷன் 31 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் கேஎல் ராகுல் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அவருக்கு துணையாக சூர்யகுமார் யாதவும் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார்.
பின் 52 ரன்கள் எடுத்த கேஎல் ராகுல் ஆட்டமிழக்க, மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சூர்யகுமார் யாதவ் 6 பவுண்டரி, 6 சிக்சர்கள் என 72 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 399 ரன்களைச் சேர்த்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் கேமரூன் க்ரீன் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.