இங்கிலாந்து அணி தற்சமயம் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்ற நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி வெல்லிங்டனில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணியானது தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில் ஹாரி புரூக் - ஒல்லி போப் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹாரி புரூக் தனது சதத்தைப் பதிவுசெய்தார். மறுபக்கம் ஒல்லி போப் 66 ரன்னில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 123 ரன்னில் ஹாரி புரூக்கும் ஆட்டமிழந்தார். இதனால் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 280 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. நியூசிலாந்து அணி சார்பில் நாதன் ஸ்மித் 4 விக்கெட்டுகளையும், வில்லியம் ஓ'ரூக் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

Advertisement

பின்னர் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய நியூசிலாந்து அணியானது அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததன் காரணமாக முதல் இன்னிங்ஸில் 125 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக கேன் வில்லியம்சன் 37 ரன்களைச் சேர்த்தார்.  இங்கிலாந்து அணி தரப்பில் கஸ் அட்கின்சன், பிரைடன் கார்ஸ் தலா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இதன்மூலம் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 155 ரன்கள் முன்னிலையும் பெற்றது. அதன்பின் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர் ஸாக் கிரௌலி 7 ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.

பின்னர் இணைந்த பென் டக்கெட் - ஜேக்கப் பெத்தெல் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் இருவரும் தங்கள் அரைசதங்களையும் பதிவுசெய்து அசத்தினர்.  இதில் இருவரும் சதமடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 10 பவுண்டரி 3 சிக்ஸர்கள் என 96 ரன்களிலும், 6 பவுண்டரி ஒரு சிக்ஸர் என 92 ரன்களையும் சேர்த்து ஆட்டமிழந்ததுடன் சதமடிக்கும் வாய்ப்பையும் தவறவிட்டனர். அதன்பின் ஜோடி சேர்ந்த ஜோ ரூட் மற்றும் ஹாரி புரூக் இணையும் சிறப்பாக விளையாடி தங்கள் அரைசதங்களை பூர்த்தி செய்தனர். அதன்பின் 55 ரன்கள் எடுத்த கையோடு ஹாரி புரூக் தனது விக்கெட்டை இழந்தார்.

இதனால் இங்கிலாந்து அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 378 ரன்களைச் செர்த்தது. இதனையடுத்து இன்று தொடங்கிய மூன்றாம் நாள் அட்டத்தை ஜோ ரூட் 73 ரன்களுடனும், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 35 ரன்களுடனும் தொடர்ந்தனர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோ ரூட் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 36ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினர். பின் 106 ரன்னில் ஜோ ரூட் விக்கெட்டை இழக்க, இங்கிலாந்து அணியும் 427 ரன்களில் டிக்ளர் செய்வதாக அறிவித்தது. இதன்மூலம் நியூசிலாந்து அணிக்கு 583 ரன்கள் இலக்காகவும் நிர்ணயிக்கப்பட்டது. 

அதன்பின் இமாலய இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணியில் டெவான் கான்வே ரன்கள் ஏதுமின்றியும், கேன் வில்லியம்சன் 6 ரன்னிலும், ரச்சின் ரவீந்திரா 6 ரன்னிலும் என ஆட்டமிழக்க, மற்றொரு தொடக்க வீரரான டாம் லேதமும் 24 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். அதன்பின் இணைந்த டேரில் மிட்செல் - டாம் பிளெண்டல் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆனால் டேரில் மிட்செல் 32 ரன்னிலும், கிளென் பிலீப்ஸ் 16 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். பின்னர் பிளெண்டலுடன் இணைந்த நாதன் ஸ்மித் அதிரடியாக விளையாட முயற்சித்தார். இதில் டாம் பிளெண்டல் சதமடித்து அசத்தினார். 

Advertisement

பின்னர் டாம் பிளெண்டல் 13 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 115 ரன்களைச் சேர்த்த நிலையில் டாம் பிளெண்டலும், 42 ரன்னில் நாதன் ஸ்மித்தும் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 259 ரன்களில் ஆல் அவுட்டானது. இதன்மூலம் இங்கிலாந்து அணி 323 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன் 2-0 என்ற கணக்கில் தொடரையும் வென்று அசத்தியுள்ளது. இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹாரி புரூக் ஆட்டநாயகன் விருதை வென்றார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News