ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 9ஆவது சீசன் வெஸ்ட் இண்டிஸ் மற்றும் அமெரிக்காவில் கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ளது. இத்தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது. மேற்கொண்டு கடந்த 2007ஆம் ஆண்டிற்கு பிறகு இந்திய அணியானது 17 ஆண்டுகளுக்கு பின் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
இதனையடுத்து நாடு திரும்ப இருந்த இந்திய அணி வீரர்கள் புயல் காரணமாக வெஸ்ட் இண்டீஸிலேயே தஞ்சமடைந்தனர். இதனையடுத்து பிசிசிஐயின் சிறப்பு ஏற்பாடின் காரணமாக இந்திய அணி வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர், ஆதரவு ஊழியர்கள், பிசிசிஐ அதிகாரிகள் என முழு குழுவும் பார்படாஸில் இருந்து தனி விமானம் மூலம் இன்றைய தினம் தாயகம் திரும்பியுள்ளனர்.
அதன்படி டி20 உலகக்கோப்பையுடன் அதிகாலை டெல்லி வந்தடைந்த வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதிலும் குறிப்பாக விமான நிலையில் ஏராளமான ரசிகர்கள் வழிநெடுவே இந்திய வீரர்களுக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். மேற்கொண்டு தங்கும் விடுதிக்கு சென்ற இந்திய அணி வீரர்களுக்கு அங்கு மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்திய அணி வீரர்கள் டெல்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தனர். உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். அதன்பின் அணி வீரர்களிடம் ஒரு சில வார்த்தைகளையும் கூறியுள்ளார். மேலு டி20 உலகக்கோப்பையுடன் இந்திய அணி வீரர்கள், பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி, அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் உள்ளிட்டோருடன் இணைந்து பிரதமர் நரேந்திர மோடி புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார்.
இந்நிலையில் அப்புகைப்படங்களானது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை தொடர்ந்து மும்பை செல்லும் இந்திய அணி வீரர்கள் மாலை 4 மணியளவில் கடற்கரை சாலை முதல் வான்கடே கிரிக்கெட் மைதானம் வரை திறந்தவெளி பேருந்தில் ரோட் ஷோவும் நடத்தவுள்ளனர். இதன் காரணமாக ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் மும்பையில் கொண்டாட்டங்களுக்கு தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.