நியூசிலாந்து டெஸ்ட் தொடர்: சேவாக்கின் சிக்ஸர் சாதனையை நெருங்கும் ரோஹித் சர்மா!

Updated: Fri, Oct 11 2024 10:12 IST
Image Source: Google

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய டெஸ்ட் அணி சமீபத்தில் வங்கதேச அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த தொடரின் முடிவில் இந்திய அணி இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்று அசத்தியதுடன் 2-0 என்ற கணக்கில் வங்கதேசத்தை வைட் வாஷ் செய்து தொடரை வென்றது.

இதனைத்தொடர்ந்து இந்திய அணி இம்மாதம் நியூசிலாந்து அணியுடனான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிவிளையாடவுள்ளது. அதன்படி இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது அக்டோபர் 16ஆம் தேதி பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கவுள்ளது. மேற்கொண்டு இத்தொடரில் பங்கேற்கும் டாம் லேதம் தலைமையிலான நியூசிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்தது. 

அதேசமயம் இத்தொடரில் பங்கேற்கும் இந்தியா அணியை பிசிசிஐ விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வங்கதேச டெஸ்ட் தொடரில் இடம்பிடித்த வீரர்களே பெரும்பாலும் இத்தொடரிலும் இடம்பிடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் அணியின் சீனியர் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு இத்தொடரில் ஓய்வு வழங்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா விளையாடும் பட்சத்தில் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பினை பெற்றுள்ளார். அந்தவகையில் இந்தப் போட்டியில் ரோஹித் சர்மா 4 சிக்ஸர்களை அடிக்கும் பட்சத்தில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. 

முன்னதாக இந்த சாதனையை இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் வீரேந்திர சேவாக் 103 டெஸ்ட் போட்டிகளில் 178 இன்னிங்ஸில் விளையாடி 90 சிக்ஸர்க்ளை அடித்து தனது பெயரில் வைத்துள்ளார். அதேசமயம் ரோஹித் சர்மா இதுவரை 61 போட்டிகளில் 105 இன்னிங்ஸ்களில் விளையாடி 87 சிக்ஸர்களை அடித்து இரண்டாம் இடத்தில் உள்ளார். மேற்கொண்டு இந்த பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி 78 சிக்ஸர்களுடன் மூன்றாம் இடத்தில் உள்ளார். 

Also Read: Funding To Save Test Cricket

இது தவிர, இந்தப் போட்டியில் ரோஹித் சர்மா சதம் அடிக்கும் பட்சத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரில் 10 அல்லது அதற்கு மேற்பட்ட சதங்கள் அடித்த நான்காவது வீரர் என்ற பெருமையை பெறுவார். இதுவரை இங்கிலாந்தின் ஜோ ரூட், ஆஸ்திரேலியாவின் மார்னஸ் லாபுஷாக்னே மற்றும் நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் ஆகியோர் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரில் 10 சதங்களுக்கு மேல் அடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை