ZIM vs PAK, 2nd ODI: சைம் அயூப் அதிரடி சதம்; தொடரை சமன்செய்தது பாகிஸ்தான்!
பாகிஸ்தான் அணி தற்சமயம் ஜிம்பாப்வேவில் சுற்றுப்பணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே அணியானது டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 80 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அசத்தியதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றது.
இந்நிலையில் ஜிம்பாப்வே - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ஜிம்பாப்வே அணிக்கு ஜெய்லார்ட் கும்பி - மருமணி ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். இதில் கும்பி 5 ரன்களுக்கும், மருமணி 4 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் கிரேய்க் எர்வின் 18 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
பின்னர் ஜோடி சேர்ந்த டியான் மியர்ஸ் - சீன் வில்லியம்ஸ் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் அரைசதம் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் டியான் மியர்ஸ் 33 ரன்களுக்கும், சீன் வில்லியம்ஸ் 31 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய சிக்கந்தர் ரஸா 17 ரன்களுக்கும், பிரையன் பென்னர்ட் 14 ரன்களிலும் என ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இதனால் ஜிம்பாப்வே அணி 32.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததுடன் 145 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
பாகிஸ்தான் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய அப்ரார் அஹ்மத் 4 விக்கெட்டுகளையும், அகா சல்மான் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு சைம் அயூப் மற்றும் அப்துல்லா ஷஃபிக் இணை இருவரும் தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் இணைந்து தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசியும் அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அதிலும் குறிப்பாக அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சைம் அயூப் எதிரணி பந்துவீச்சாளர்களை திணறவைத்தார்.
Also Read: Funding To Save Test Cricket
தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த சைம் அயூப் 53 பந்துகளில் தனது முதல் சர்வதேச ஒருநாள் சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அத்துடன் நிற்காத அவர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 17 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 113 ரன்களையும், அப்துல்லா ஷஃபிக் 32 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் பாகிஸ்தான் அணி 18.2 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன், 10 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்பே அணியை வீழ்த்தி 1-1 என்ற கணக்கில் தொடரையும் சமன்செய்து அசத்தியுள்ளது. இப்போட்டியில் சதமடித்து அசத்திய சைம் அயூப் ஆட்டநாயகன் விருதை வென்றார்.