இந்திய ரசிகர்களுக்கு நிகர் உலகில் யாருமில்ல - கெயில் நெகிழ்ச்சி!

Updated: Wed, Feb 08 2023 12:33 IST
'She Was In Pain And Wanted Me To Hit More Sixes': Chris Gayle Recalls When He Broke A Fan's Nose Wi
Image Source: Google

உலக அளவில் தற்போது டி20 கிரிக்கெட் என்பது சர்வதேச கிரிக்கெட்டுக்கு சவால் கொடுக்கும் வகையில் விஸ்வரூப வளர்ச்சி கண்டுள்ளதற்கு வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் கிறிஸ் கெயில் முக்கியமானவர் என்றால் மிகையாகாது. ஏனெனில் 2007இல் அறிமுகப்படுத்தப்பட்ட வரலாற்றின் முதல் டி20 உலக கோப்பையின் முதல் போட்டியிலேயே தென் ஆபிரிக்காவை அதன் சொந்த மண்ணில் பந்தாடி சதமடித்த அவர், அதிலிருந்து தன்னுடைய அதிரடி சரவெடியான பேட்டிங்கால் எதிரணி பவுலர்களைப் பந்தாடி ரசிகர்களிடைய டி20 கிரிக்கெட் மிகவும் பிரபலமாவதற்கு முக்கிய காரணமாக அமைந்தார். 

குறிப்பாக சர்வதேச கிரிக்கெட்டிலேயே அதிக சிக்ஸர்கள் அடித்த வீரராக இப்போதும் உலக சாதனை படைத்துள்ள அவர் ஐபிஎல் தொடரில் பலமுறை சூறாவளி புயலாக எதிரணிகளை பந்தாடியதை மறக்கவே முடியாது. அந்த வகையில் ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் விளையாடி அதிக ரன்கள் குவித்த வீரராக பல சாதனைகள் படைத்துள்ள அவர் டி20 கிரிக்கெட்டின் சச்சின் டெண்டுல்கர் என்றே அழைக்கப்படுகிறார். அப்படி மகத்தான வீரராக கருதப்படும் அவரது கேரியரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஐபிஎல் அணியும் 2013 வருடமும் மறக்க முடியாத ஒன்றாக அமைந்தது. 

ஏனெனில் அந்த அணிக்காக நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ள அவர் 2013 சீசனில் புனே அணிக்கு எதிராக 175* ரன்களை விளாசி டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக சதம், அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த வீரர் போன்ற பல உலக சாதனைகளை படைத்தார்.அதிலிருந்தே இந்தியாவில் குறிப்பாக பெங்களூருவில் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவெடுத்து இன்றும் கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற அந்த போட்டியின் போது தாம் அடித்த சிக்ஸர் ஒரு ரசிகையின் மூக்கில் பட்டு மிகப்பெரிய காயத்தை ஏற்படுத்தியதாக கிறிஸ் கெயில் நினைவு கூர்ந்துள்ளார். 

ஆனால் தமக்கு காயமடைந்ததை பற்றி கவலைப்படாமல் “ஏன் சோகமாக இருக்கிறீர்கள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் நிறைய சிக்சர்கள் அடியுங்கள்” என்று அந்த ரசிகை நேரில் சென்று பார்த்த போது தம்மிடம் தெரிவித்தது தனது நெஞ்சை தொட்டதாகவும் கெயில் தெரிவித்துள்ளார். அதை விட அடுத்த போட்டியில் தங்களது மூக்கில் அடியுங்கள் என்று பெரும்பாலான ரசிகர்கள் பதாகைகளுடன் தமது பேட்டிங்கை பார்க்க வந்ததை பார்த்து ஆச்சரியப்பட்டதாக தெரிவிக்கும் அவர் உலகிலேயே இந்தியாவின் பெங்களூருவில் இருக்கும் ரசிகர்களைப் போல் எங்கு பார்த்ததில்லை என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “அப்போட்டியில் ஏபி டிவில்லியர்ஸ் வந்து 8 பந்துகளில் 30 ரன்கள் அடித்தார். மேலும் கிறிஸ் கெயில் அவருக்கும் ஸ்ட்ரைக் கொடுக்காமல் இருந்திருந்தால் 215 ரன்கள் அடித்திருப்பார் என்று எங்களது அணியினர் நினைத்தனர். அதை விட அந்தப் போட்டியில் நான் அடித்த ஒரு சிக்சர் மைதானத்தின் சுவற்றில் பட்டு ஒரு இளம் ரசிகையின் மூக்கில் அடித்தது. அப்போட்டி முடிந்த பின் உடனடியாக மருத்துவமனைக்கு சென்ற நான் ரத்தம் வழிந்த அந்த ரசிகையின் மூக்கையும் துணிகளையும் பார்த்தேன். ஆனால் அந்த ரசிகையோ “நீங்கள் என் சோகமாக இருக்கிறீர்கள்? எதைப் பற்றியும் கவலைப்படாமல் நிறைய சிக்சர்கள் அடியுங்கள்” என்று என்னிடம் சொன்னது வியக்கத் தகுந்ததாக இருந்தது.

காயத்தால் வலியுடன் இருந்த போதும் அவர் அதிக சிக்ஸர்கள் அடிக்குமாறு என்னிடம் தெரிவித்தது மனதளவில் என்னை நல்ல படியாக உணர வைத்தது. அது என்னுடைய நெஞ்சத்தையும் தொட்டது. ஆனால் அதை விட அடுத்த போட்டியில் ஒவ்வொரு ரசிகர்கள் கையிலும் “தயவு செய்து எங்களுடைய மூக்கை உடையுங்கள் கெயில் அப்போது தான் நீங்கள் எங்களை மருத்துவமனைக்கு வந்து பார்ப்பீர்கள்” என்ற பதாகைகள் இருந்தன. அந்த வகையில் உலகில் நான் பார்த்ததிலேயே பெங்களூரு அணி ரசிகர்கள் மிகவும் வியப்பானவர்கள். குறிப்பாக சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி ஆர்சிபி என்ற முழக்கத்தை கேட்பது மிகவும் ஸ்பெஷலானது” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை