பிபிஎல் 13: லௌரி எவன்ஸ், லான்ஸ் மோரிஸ் அபாரம்; பெர்த் ஸ்காச்சர்ஸ் அசத்தல் வெற்றி!
13ஆவது சீசன் பிக் பேஷ் லீக் தொடரில் இன்று நடைபெற்ற 25ஆவது லீக் ஆட்டத்தில் பெர்த் ஸ்காச்சர்ஸ் - அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பெர்த் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் என்ற அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ச் அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பெர்த் அணிக்கு ஸாக் கிரௌலி - வைட்மேன் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் ஸாக் கிரௌலி 10 ரன்களிலும், வைட்மேன் 31 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த ஆரோன் ஹார்டி - ஜோஷ் இங்லிஸ் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். பின் ஹார்டி 34 ரன்களுக்கும், ஜோஷ் இங்லிஸ் 26 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய லௌரி எவன்ஸ் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன் அரைசதம் கடந்து அசத்தினார்.
இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த லௌரி எவன்ஸ் 28 பந்துகளில் 7 பவுண்டரி, 7 சிக்சர்களை விளாசி 85 ரன்களைச் சேர்த்து அசத்தினார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் பெர்த் ஸ்காச்சர்ஸ் அணி 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 211 ரன்களைச் சேர்த்தது. அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி தரப்பில் தொர்ன்டன், ஓவர்டன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணிக்கு மேத்யூ ஷார்ட் - டி ஆர்சி ஷார்ட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் மேத்யூ ஷார்ட் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்த, மறுபக்கம் டி ஆர்சி ஷார்ட் 6 ரன்களிலும், கிறிஸ் லின் 27 ரன்களிலும், ஆடம் ஹோஸ் 13 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர்.
இதற்கிடையில் அதிரடியாக விளையாடி வந்த மேத்யூ ஷார்ட் அரைசதம் கடந்து விளையாடி வந்த நிலையில் 7 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 74 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். அதன்பின் வந்த தாமஸ் கெல்லி 29 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழக்க, பின்னர் களமிறங்கிய ஜேமி ஓவர்டன், ஜேம்ஸ் பேஸ்லி, ஹேரி நெல்சன், ஹென்ரி தொர்ன்டன், கேமரூன் பொய்ஸ் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.
இதனால் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 169 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பெர்த் அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய லான்ஸ் மோரிஸ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் பெர்த் ஸ்காச்சர்ஸ் அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது.