தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துவரும் பாகிஸ்தான் அணி தற்சமயம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் டெம்பா பவுமா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. அணியின் தொடக்க வீரர்கள் கேப்டன் ஷான் மசூத் 14 ரன்களில் விக்கெட்டை இழக்க, மற்றொரு தொடக்க வீரரான சைம் அயூப்பும் 14 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய நட்சத்திர வீரர் பாபர் ஆசாமும் 4 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் ஜோடி சேர்ந்த காம்ரன் குலாம் மற்றும் சௌத் ஷகீல் இணை அணியின் ஸ்கோரை உயார்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் அதிரடியாக தொடங்கிய ஷகில் 14 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் அரைசதம் கடந்து அசத்திய காம்ரன் குலாமும் 54 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களில் முகமது ரிஸ்வான் 27 ரன்களையும், அமீர் ஜமால் 28 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 211 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் டேன் பேட்டர்சன் 5 விக்கெட்டுகளையும், கார்பின் போஷ் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.