
இந்தியா- ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, உஸ்மான் கவஜா(180) மற்றும் கேமரூன் கிரீன்(114) இருவரும் அபாரமாக சதம் விளாசினர். இதனால் ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸில் 480 ரன்கள் அடித்தது.
அதை பின்தொடர்ந்து விளையாடிய இந்திய அணிக்கு விராட் கோலி(186), ஷுப்மன் கில்(128) இருவரும் சதமடிக்க, முதல் இன்னிங்சில் 571 ரன்கள் அடித்து 91 ரன்கள் முன்னிலை வைத்தது. விராட் கோலி, டெஸ்ட் கிரிக்கெட்டில் சுமார் 1208 நாட்களுக்குப் பிறகு சதம் அடித்திருந்தார்.
அதன்பிறகு பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 4ஆம் நாள் விக்கெட் இழப்பின்றி 3 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. இதையடுத்து 5ஆம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த ஆஸ்திரேலிய அணி முதல் விக்கெட்டை 14 ரன்களுக்கும் 2ஆவது விக்கெட்டை 153 ரன்களுக்கும் இழந்தது. தேநீர் இடைவெளிக்குப்பின்னும் வெறும் 2 விக்கெட்டுகளை மட்டுமே ஆஸ்திரேலிய அணி இழந்திருந்தது.