பெரிய வீரர்கள் விளையாட முடிவு செய்தால் இளம் வீரர்கள் தங்கள் இடத்தை இழப்பார்கள் - அபிஷேக் நாயர்!
ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் விளையாட முடிவு செய்யும் பொழுது, அந்த இடத்தில் நன்றாக செயல்பட்டு வரும் இளம் வீரர்கள் விளையாட முடியாமல் போகிறது என முன்னாள் வீரர் அபிஷேக் நாயர் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், மூன்றாவது போட்டிக்கு இந்திய அணிக்கு நட்சத்திர வீரர்கள் திரும்புகிறார்கள். இந்தத் தொடரில் முதல் இரண்டு போட்டிகளுக்கு கேஎல் ராகுல் தலைமையில் இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஹர்திக் பாண்டியா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் இடம் பெறவில்லை.
அதே சமயத்தில் திலக் வர்மா, பிரசித் கிருஷ்ணா, ருதுராஜ் போன்ற வீரர்கள் இடம் பெற்றார்கள். மூன்றாவது போட்டிக்கு முதல் இரண்டு போட்டிகளில் விளையாடாத வீரர்கள் திரும்பும் பொழுது, இவர்கள் அந்தப் போட்டிக்கான அணியில் இருந்து நீக்கப்பட்டார்கள். இந்நிலையில் நட்சத்திர இந்திய வீரர்கள் இல்லாமலே, கேஎல் ராகுல் தலைமையில் இளம் வீரர்கள் கொண்ட இந்திய அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில், முதல் இரண்டு போட்டிகளை வென்று தொடரை கைப்பற்றி விட்டது.
Trending
தற்பொழுது இந்த நிலையில் மூன்றாவது போட்டிக்கு இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் திரும்ப வேண்டுமா? என்கின்ற ஒரு கேள்வி எழுந்திருக்கிறது. ஏனென்றால் இளம் வீரர்கள் தொடர்ந்து ஒரு பக்கம் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். எனவே அவர்களுக்கு வாய்ப்பு தருவது மிக முக்கியமான விஷயம். மேலும் முக்கிய வீரர்கள் அணிக்குள் வந்து அந்த போட்டியை தோற்றால், அது அணியின் நம்பிக்கையை பாதிக்கும்.
இந்நிலையில் இதுகுறித்து பேசி உள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் அபிஷேக் நாயர், “நட்சத்திர வீரர்கள் அணிக்குள் வர தங்களை தாங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளும் இடத்தில் இருக்கிறார்கள். பெரிய வீரர்கள் விளையாட முடிவு செய்தால் இளம் வீரர்கள் தங்கள் இடத்தை இழப்பார்கள். இது ரோஹித் கையில் இருக்கக்கூடிய முடிவு. இந்த இடத்தில் ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் விளையாட முடிவு செய்யும் பொழுது, அந்த இடத்தில் நன்றாக செயல்பட்டு வரும் இளம் வீரர்கள் விளையாட முடியாமல் போகிறது.
தற்பொழுது ஸ்ரேயாஸ், சூர்யகுமார் மற்றும் இசான் கிஷான் போன்றவர்கள் நன்றாக விளையாடுகிறார்கள். அவர்கள் தொடர்ந்து விளையாடி பேட்டிங் ஃபார்ம் பெறட்டும். இந்தத் தொடரை ஒட்டுமொத்தமாக இளம் வீரர்கள் முடிக்கட்டும். பிறகு உலக கோப்பையின் முதல் போட்டியில் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ளலாம். இதுதான் சரியான ஒன்றாக இருக்கும். ஆனால் மூன்றாவது போட்டிக்கு இந்திய அணியின் சிந்தனைக்குழு எப்படி செல்கிறது என்பதை பார்ப்பதற்கு சுவாரசியமாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now