
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஃப்கானிஸ்தான் அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நடந்து முடிந்த முதலிரண்டு ஒர்நாள் போட்டிகளிலும் இலங்கை அணி வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை வென்றது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை நடைபெறவுள்ளது.
இதனைத்தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான ஆஃப்கானிஸ்தான் அணி நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டது. இப்ராஹிம் ஸத்ரான் தலைமையிலான இந்த அணியில் ரஷித் கான் இடம்பிடிக்கவில்லை. அதேசமயம் மற்றொரு நட்சத்திர வீரரான முஜீப் உர் ரஹ்மானும் காயம் காரணமாக இத்தொடரிலிருந்து விலகியுள்ளார்.
இந்நிலையில் ஆஃப்கானிஸ்தான் அணிக்கெதிரான டி20 தொடரில் விளையாடும் இலங்கை அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. வநிந்து ஹசரங்கா தலைமையிலான இந்த அணியில் அனுபவ வீரர்கள் எஞ்சலோ மேத்யூஸ், குசால் பெரேரா, தசுன் ஷனகா ஆகியோருக்கு அணியில் இடம்கிடைத்துள்ளது. அதேபோல் மதீஷா பதிரானா, தில்சன் மதுஷங்கா, மஹீஷ் தீக்ஷனா, பினுரா ஃபெர்னாண்டோ ஆகியோரும் இடம்பிடித்துள்ளனர்.