
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஃப்கானிஸ்தான் அணி ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடரானது கடந்த 02ஆம் தேதி கொழும்புவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் நடைபெறவுள்ளது.
அதன்படி இலங்கை ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி வரும் 09ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கு ஆஃப்கானிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. அதன்படி, அறிவிக்கப்பட்டுள்ள ஒருநாள் அணியிலிருந்தும் நட்சத்திர வீரர் ரஷித் கான் காயம் காரணமாக இடம்பெறவில்லை.
ஹஸ்மதுல்லா ஷாஹிதி தலைமையிலான இந்த அணியில் நவீத் ஸத்ரான், கைஸ் அஹ்மத் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் ரஹ்மனுல்லா குர்பாஸ், ரஹ்மத் ஷா, குல்பதின் நைப், முஜீப் உர் ரஹ்மான், நூர் அஹ்மத், இப்ராஹிம் ஸத்ரான் போன்ற நட்சத்திர வீரர்களும் அணியில் இடம்பிடித்துள்ளனர். அவர்களுடன் ஷராபுதீன் அஷ்ரப், ஷாஹிதுல்லா கமல், அப்துல் ரஹ்மான் ரஹ்மானி, பிலால் சமி ஆகியோர் ரிசர்வ் வீரர்களாக அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.