
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரிலும், இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் தற்சமாயம் டி20 தொடர் நடைபெற்று வரும் நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் டிசம்பர் 17அம் தேதி முதலும், டெஸ்ட் தொடரானது பாக்ஸிங் டேவான டிசம்பர் 26ஆம் தேதி முதலும் தொடங்கவுள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து ஜேசன் கில்லெஸ்பி விலகுவதாக அறிவித்து அந்நாட்டு ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளார். முன்னதாக இந்தாண்டு ஏப்ரல் மாதம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஜேசன் கில்லெஸ்பியை டெஸ்ட் அணியின் பயிற்சியாளராக இரண்டு ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்திருந்தது. இவரது பயிற்சியின் கீழ் பாகிஸ்தான் அணி வங்கதேசத்திற்கு எதிராக சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்தது.
ஆனால் அதன்பின் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பகிஸ்தான் அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றி அசத்தியது. இதனையடுத்து அவர் ஆஸ்திரேலியா மற்றும் ஜிம்பாப்வே தொடர்களுக்கான பாகிஸ்தான் ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் தற்காலிக தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருந்தார். அனால் அவரது பயிற்சியின் கீழ் பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில், அடுத்து நடந்த டி20 தொடரில் 3-0 என்ற கணக்கில் மோசமான தோல்வியை சந்தித்தது.