பாகிஸ்தான் அணியின் கேப்டனாக மீண்டும் பாபர் ஆசாம் நியமனம்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் ஜூன் மாதம் நடைபெறவுள்ள நிலையில், பாகிஸ்தான் அணியின் ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டனாக பாபர் ஆசாம் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்தாண்டு இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி 6ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது. இத்தொடரில் பாபர் ஆசாம் தலைமையில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி இந்த உலகக்கோப்பை தொடரில் விளையாடிய 9 லீக் போட்டிகளில் 4 வெற்றி, 5 தோல்வி என புள்ளிப்பட்டியளில் 5ஆம் இடத்தைப் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை தவறவிட்டு லீக் சுற்றுடன் தொடரிலிருந்து வெளியேறியது.
அதிலும் குறிப்பாக அந்த அணி தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிரான தோல்வியே அரையிறுதி வாய்ப்பை முற்றிலுமாக தடுத்துள்ளது. அதுமட்டுமின்றி கேப்டன் பாபர் ஆசாமின் செயல்பாடுகளும் இந்த தொடரில் பெரிதளவில் இல்லாதது அணிக்கு மிகப்பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது. மேலும் அவர் கேப்டன்ஸியில் எடுக்கும் முடிவுகள், பந்துவீச்சாளர்களை பயன்படுத்திய விதம், அவரது பேட்டிங் ஃபார்ம் என அனைத்திலும் கடும் விமர்சனங்கள் எழுந்ததுடன், அவரது கேப்டன்சி குறித்த கேள்விகளும் வலுத்தன.
Trending
இதன் காரணமாக உலகக்கோப்பை தோல்விக்கு பொறுப்பேற்று பாகிஸ்தான் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இதனையடுத்து பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் கேப்டனாக ஷான் மசூத்தும், டி20 அணியின் கேப்டனாக ஷாஹீன் அஃப்ரிடியும் நியமிக்கப்பட்டனர். ஆனால் அவர்கள் தலைமையில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து தொடர்களை எதிர்கொண்ட பாகிஸ்தான் அணி படுதோல்விகளைச் சந்தித்தது. இதனால் வரவுள்ள டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியை வழிநடத்துவது யார் என்ற கேள்வி எழுந்தது.
Babar Azam Reappointed as Pakistan's ODI & T20I captain!#Pakistan #Cricket #BabarAzam #T20WorldCup pic.twitter.com/IoMZZOMViU
— CRICKETNMORE (@cricketnmore) March 31, 2024
இந்நிலையில் பாகிஸ்தான் ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டனாக பாபர் ஆசாம் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். இதனை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் உறுதிசெய்துள்ளது. இதுகுறித்து பிசிசி தனது எக்ஸ் தள பதிவில், “பாகிஸ்தான் ஒருநாள், டி20 அணியின் கேப்டனாக பாபர் ஆசாம் நியமிக்கப்படுகிறார். பிசிபி தேர்வுக் குழுவின் ஒருமித்த பரிந்துரையைத் தொடர்ந்து, பாகிஸ்தான் ஒருநாள், டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக பாபர் ஆசாமை நியமிக்கப்பட்டுள்ளார்” என்று பதிவுசெய்துள்ளது.
இதன்மூலம், வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான பாகிஸ்தான் அணியை பாபர் ஆசாம் வழிநடத்துவார் என்பது உறுதியாகியுள்ளது. அதேசமயம் அணியின் துணைக்கேப்டனாக ஷாஹின் அஃப்ரிடி நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் ஷாஹின் அஃப்ரிடியை கேப்டன் பதவியிலிருந்து விலக்கியது சில சர்ச்சைகளுக்கும் வழிவகுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now