
பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர்களாகவும், அந்த அணியின் முன்னாள் கேப்டன்களாகவும் செயல்பட்டுள்ள பாபர் ஆசாம், முகமது ரிஸ்வான் மற்றும் ஷாஹீன் அஃப்ரிடி ஆகியோரை டி20 அணியில் இருந்து நீக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவுசெய்துள்ளதாக கூறப்படுகிறது.
பாகிஸ்தான் அணியில் கடந்த சில ஆண்டுகளாகவே சீரற்ற தன்மை நிலவி வருகிறது. அணியின் பயிற்சியாளரை மற்றுதல், அணியின் கேப்டன்களை மாற்றுதல், அணியின் தேர்வுகுழுவினரை மற்றுதல் என பல்வேறு நடவடிக்கைகளை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மேற்கொண்டு வருகிறது. இதனால் அந்த அணி அடுத்தடுத்த ஐசிசி தொடர்களில் பெரிதளவில் சோபிக்க முடியாமல் தடுமாறி வருகிறது. குறிப்பாக சாம்பியன்ஸ் கோப்பை தொடரிலும் அந்த அணி லீக் சுற்றுடன் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தது.
இதையடுத்து எதிர்வரும் ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு தயாராகும் வகையில் பாகிஸ்தான் அணி பல்வேறு முடிவுகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக சமீபத்தில் நடந்து முடிந்த வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரில் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக சல்மான் அலி ஆகாவும், துணைக்கேப்டனாக ஷதாப் கனும் நியமிக்கப்பட்ட நிலையில், பாபர் ஆசாம், முகமது ரிஸ்வான், ஷாஹீன் ஷா அஃப்ரிடி ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டிருந்தனர்.