
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் விறுவிறுப்புக்கு பஞ்சம் இன்றி முடிவடைந்தது. இந்த தொடரை 2 - 1 என்ற புள்ளிக்கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இதனையடுத்து இரு அணிகளும் மோதும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறவுள்ளது. இப்போட்டிகள் வரும் மார்ச் 17ஆம் தேதி முதல் மும்பையில் தொடங்கி மார்ச் 22ஆம் தேதி சென்னையில் நிறைவு பெறும்.
டெஸ்ட் தொடரின் போது அனைத்து வீரர்களும் மிகச்சிறப்பாக செயல்பட்டதால் தொடக்கம் முதல் இறுதி வரை இந்திய அணி ஆதிக்கம் செலுத்த முடிந்தது. ஆனால் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தொடக்கத்திலேயே பிரச்சினை தான். நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக விலகியுள்ளார். முதுகுவலி பிரச்சினை எனக்கூறி ஸ்கேன் எடுத்த போது, ஸ்ரேயாஸுக்கு பழைய காயமே ஆறாமல் இருப்பது தெரியவந்தது. எனவே அவருக்கு ஓய்வு கொடுத்துவிட்டனர்.
இதனையடுத்து ஸ்ரேயாஸ் ஐயரின் இடத்திற்கு அனுபவ வீரரான சஞ்சு சாம்சன் கொண்டு வரப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் ஒருநாள் போட்டிகளில் சஞ்சு சாம்சன் 66 ரன்கள் என்ற சராசரியை கொண்டுள்ளார். எந்த இடத்தில் வேண்டுமானாலும் மாற்றி களமிறங்கக்கூடியவர். இக்கட்டான சூழல்களில் மிடில் ஆர்டரில் இருந்து அணியை காப்பாற்றுவார், ஃபினிஷராகவும் செயல்படுவார். இதனால் சாம்சனுக்கு ஒருவழியாக வாய்ப்பு கிடைத்துவிட்டது என ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.