
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி மார்ச் 09ஆம் தேதி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய அணி வீரர்களுக்கான பிசிசிஐ மத்திய ஒப்பந்த பட்டியல் வெளியிடுவதில் தாமதமாகியுள்ளது. முன்னதாக கடந்த மாதமே பிசிசிஐ வீரர்களுக்கான ஒப்பந்த பட்டியலை வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்சமயம் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் வீரர்களின் செயல்திறனை கருத்தில் கொண்டு ஒப்பந்த பட்டியலில் பிசிசிஐ சில மாற்றங்களை செய்ய விரும்புவதாகவும், அதன் காரணமாகவே தற்போது இதில் தாமதமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து வெளியான தகவலின் படி, பிசிசிஐ கடந்த ஆண்டு பிப்ரவரி 28 அன்று வீரர்களுக்கான மத்திய ஒப்பந்தங்களை அறிவித்தது, ஆனால் இந்த முறை வாரியம் அதை சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டி வரை ஒத்திவைத்துள்ளது. மேலும் இதற்கான காரணங்களாக ஏ+ மற்றும் ஏ பிரிவுகளில் பிசிசிஐ மாற்றம் செய்ய விரும்புவதாகவும், இதில் தற்போதுள்ள சில இந்திய வீரர்கள் ஏ+ பிரிவில் சேர்க்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.