
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடர் வரும் 9ஆம் தேதி தொடங்குகிறது. இந்த தொடர் மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. நாக்பூர், டெல்லி, தர்மசாலா மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களில் 4 டெஸ்ட் போட்டிகள் நடக்கின்றன.
இந்த டெஸ்ட் தொடர் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கானது. மேலும், இந்த தொடர் தான் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலிஸ்ட்டை தீர்மானிக்கும் தொடருமாகும். டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களில் இருக்கும் அணிகள் மோதும். இப்போதைக்கு 75.56 சதவிகிதத்துடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் வலுவாக இருக்கும் ஆஸ்திரேலிய அணி ஃபைனலுக்கு முன்னேறுவது உறுதி.
58.93 சதவிகிதத்துடன் 2ஆம் இடத்தில் இருக்கும் இந்திய அணி, அந்த இடத்தை வலுவாக தக்கவைத்து இறுதிப்போட்டிக்கு முன்னேற வேண்டுமானால், ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரை 2-0 அல்லது 3-0 அல்லது 2-1 அல்லது 3-1 என வெல்ல வேண்டும். எனவே இந்த தொடர் கடும் போட்டியாக இருக்கும். கடைசி 2 முறை ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்த இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் அந்த அணியை வீழ்த்தி டெஸ்ட் தொடர்களை வென்றது. எனவே அதற்கு இந்திய மண்ணில் இந்திய அணியை வீழ்த்தி பழிதீர்க்கும் முனைப்பில் உள்ளது ஆஸ்திரேலிய அணி.