
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இந்திய அணி 5 போட்டிகளை உள்ளடக்கிய பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடியது. இத்தொடரின் முதல் நான்கு டெஸ்ட் போட்டிகளின் முடிவில் ஆஸ்திரேலிய அணி இரண்டு போட்டிகளிலும், இந்திய அணி ஒரு போட்டியிலும் ஒரு போட்டியிலும் டிராவிலும் முடிவடைந்துள்ளது. இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகித்தது.
இதையடுத்து ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் ரிஷப் பந்த் 40 ரன்களையும், , ரவீந்திர ஜடேஜா 26, ஜஸ்பிரித் பும்ரா 22 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழக்க, இந்திய அணி 185 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஸ்காட் போலனட் 4 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணியில் அறிமுக வீரர் பியூ வெப்ஸ்டர் அரைசதம் கடந்து அசத்தினார். மேற்கொண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வெப்ஸ்டர் 57 ரன்களையும், அவரைத் தவிர்த்து ஸ்டீவ் ஸ்மித் 33 ரன்களையும், சாம் கொன்ஸ்டாஸ் 23 ரன்களையும் சேர்த்த நிலையில் மற்ற வீரர்கள் ரன்களைச் சேர்க்க தவறினர். ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 51 ஓவர்களை மட்டுமே விளையாடி 181 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் முகமது சிராஜ் மற்றும் பிரஷித் கிருஷ்ணா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், நிதிஷ் ரெட்டி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.