
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் சுவாரஸ்ய கட்டத்தை எட்டியுள்ளது. முதல் 2 போட்டிகளில் இந்தியா வெற்றி கண்டு முன்னிலை வகித்துள்ளது. இதனையடுத்து இரு அணிகளும் மோதும் 3ஆவது டெஸ்ட் போட்டி வரும் மார்ச் 1ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இந்த போட்டி இந்தூரில் உள்ள மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் 2 டெஸ்ட்களில் இந்திய அணி அபார வெற்றிகளை பதிவு செய்திருந்தாலும், துணைக்கேப்டன் கே.எல்.ராகுல் படு மோசமாக சொதப்பியது தான் சர்ச்சையை கிளப்பியது. இதுவரை அவர் ஆடிய 3 இன்னிங்ஸ்களில் 20,17, 1 என மிக குறைவாகவே ரன் அடித்தார். இதனால் அவரை நீக்கியே தீர வேண்டும் என கண்ட குரல்கள் எழுந்தன. அதற்கேற்றார் போலவே பிசிசிஐ-ம் நடவடிக்கை எடுத்தது.
அதாவது 3வது மற்றும் 4வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியை அறிவிக்கும் போது துணைக்கேப்டன் பதவியில் இருந்து கே.எல்.ராகுலை நீக்கிவிட்டது. இதனால் அடுத்து வரும் போட்டிகளில் கே.எல்.ராகுலுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா? அல்லது நீக்கிவிட்டு சுப்மன் கில்லுக்கு வாய்ப்பை தருவார்களா என்ற குழப்பம் எழுந்துள்ளது.