
ஐசிசியின் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு ஜூன் 3ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை வெஸ்ட்இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்கிறது. 20 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடர் 55 ஆட்டங்களை கொண்டது. இந்த நிலையில் வரவுள்ள டி20 உலக கோப்பையில் விராட் கோலி, ரோஹித் சர்மா விளையாட வேண்டும் என்று வெஸ்ட்இண்டீஸ் முன்னாள் பிரபல வீரர் பிரைன் லாரா விருப்பம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “சமீபத்தில் நடந்து முடிந்த உலகக் கோப்பையில் (50 ஓவர்) இந்திய அணி சிறந்த கிரிக்கெட்டை வெளிப்படுத்தியது. அபாரமாக விளையாடி முக்கியமான ஆட்டத்தில் தோல்வி ஏற்படுவது சில சமயங்களில் நடக்கும். விராட் கோலி, ரோஹித் சர்மா அனுபவம் வாய்ந்த வீரர்கள். அவர்களது அனுபவத்துக்கு மாற்று இல்லை. வெஸ்ட்இண்டீஸ் ஆடுகளங்களை நன்கு அறிந்தவர்கள். சிறப்பாக விளையாடக் கூடியவர்கள்.
இதனால் 20 ஓவர் உலக கோப்பையில் அவர்கள் விளையாட வேண்டும். அவர்களை அணியில் சேர்க்க வேண்டும். இந்தியா எந்த அணியை தேர்வு செய்தாலும் ஒரு வலிமையான சக்தியாக இருக்கும் என்று நினைக்கிறேன். அதேநேரத்தில் கோலியும், ரோகித் சர்மாவும் ஜாம்பவான்கள். அவர்களை எளிதில் நிராகரித்துவிட இயலாது” என தெரிவித்துள்ளார்.