
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இன்றைய தினம் 2025-26ஆம் ஆண்டிற்கான வீரர்கள் மத்திய ஒப்பந்தத்தை அறிவித்துள்ளது. மொத்தம் 23 பேர் அடங்கிய இந்த மத்திய ஒப்பந்தத்தில் இளம் வீரர்கள் சாம் கொன்ஸ்டாஸ், பியூ வெப்ஸ்டர், மேத்யூ குஹ்னேமன் ஆகியோர் முதல் முறையாக இடம்பிடித்துள்ளனர்.
முன்னதாக நடந்து முடிந்த இந்திய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரின் மூலம் சாம் கொன்ஸ்டாஸ் மற்றும் பியூ வெப்ஸ்டர் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், ஆஸ்திரேலிய அணி தொடரை கைப்பற்றவும் உறுதுணையாக இருந்தனர். இதில் கொன்ஸ்டாஸ் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 13 ரன்களையும், பியூ வெப்ஸ்டர் மூன்று போட்டிகளில் விளையாடி 150 ரன்களையும், 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
அதேசமயம் மேத்யூ குஹ்னமேன் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தி ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் தொடரைக் கைப்பற்ற உதவினர். இதன் காரணமாக இவர்கள் மூவருக்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஒப்பந்தத்தை அறிவித்துள்ளது. அதேசமயம் முன்னதாக மத்திய ஒப்பந்தத்தில் இடம்பிடித்திருந்த ஆரோன் ஹார்டி, டாட் மர்ஃபி மற்றும் சீன் அபோட் ஆகியோர் ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.