சாம்பியன்ஸ் கோப்பை 2025: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை அரையிறுதி போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் பலப்பரீட்சை நடத்தின.
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு டிராவிஸ் ஹெட் மற்றும் கூப்பர் கன்னொலி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் கூப்பர் கன்னொலி ரன்கள் எதுமின்றி விக்கெட்டை இழந்தார். அதன்பின் அதிரடியாக விளையாடிய டிராவிஸ் ஹெட் தனது பங்கிற்கு 5 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 39 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான தொடக்கத்தைக் கொடுத்த கையோடு வருண் சக்ரவர்த்தி பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.
Trending
பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் மார்னஸ் லபுஷாக்னே இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்ததுடன் சீரான வேகத்தில் ஸ்கோரையும் உயர்த்தினர். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இருவரும் இணைந்து மூன்றாவது விக்கெட்டிற்கு 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், மார்னஸ் லபுஷாக்னே 29 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஜோஷ் இங்கிலிஸும் 11 ரன்களை மட்டுமே எடுத்த கையோடு விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.
இதற்கிடையில் ஸ்டீவ் ஸ்மித் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். பின்னர் ஸ்மித்துடன் இணைந்த அலெக்ஸ் கேரியும் சிறப்பாக விளையாடி 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தார். அதன்பின் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸருடன் 73 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கிளென் மேக்ஸ்வெல் 7 ரன்னிலும், பென் துவார்ஷூயிஸ் 19 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். ஒருபக்கம் விக்கெட்டுகள் இழந்தாலும் மறுமுனையில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அலெக்ஸ் கேரி தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
இறுதியில் 8 பவுண்டரி, ஒரு சிக்ஸருடன் 60 ரன்களை எடுத்திருந்த அலெக்ஸ் கேரி ரன் அவுட் முறையில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களும் சோபிக்க தவறினர். இதனால் ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 264 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்திய அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய முகமது ஷமி 3 விக்கெட்டுகளையும், வருண் சக்ரவர்த்தி மற்றும் ரவீந்திர ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா - ஷுப்மன் கில் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஷுப்மன் கில் 8 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து அதிரடியாக தொடங்கிய ரோஹித் சர்மாவும் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 28 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த விராட் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தியதுடன், சீரான வேகத்தில் ஸ்கோரையும் உயர்த்தினார்.
இதில் விராட் கோலி தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இதன்மூலம் இருவரின் பார்ட்னர்ஷிப்பும் 95 ரன்களை எட்டிய நிலையில் அரைசதத்தை நெருங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் 45 ரன்னில் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய அக்ஸர் படேலும் தனது பங்கிற்கு 27 ரன்களை எடுத்த கையோடு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் விராட் கோலியுடன் இணைந்த கேல் ராகுல் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் உயர்ந்தது. அதன்பின் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 84 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.
Also Read: Funding To Save Test Cricket
இறுதியில் அதிரடியாக விளையாடிய ஹர்திக் பாண்டியா தனது பங்கிற்கு ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 28 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழக்க, மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேஎல் ராகுல் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 42 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் இந்திய அணி 48.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இதன்மூலம் நடப்பு சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கும் இந்திய அணி முன்னேறி அசத்தியுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now