
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான ஓட்டம் தற்பொழுது மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியா, இந்தியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய மூன்று அணிகள் இந்த ஓட்டத்தில் முன்னணியில் இருக்கின்றன. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான கடைசி தொடராக ஆஸ்திரேலிய அணிக்கும் இந்திய அணிக்கும் ஒரே தொடர் அமைந்திருக்கிறது. இந்த தொடரில் பங்கேற்க பிப்ரவரி மாதம் ஆஸ்திரேலியா அணி இந்தியா வருகிறது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. கடைசியாக இந்தியாவில் 2004 ஆம் ஆண்டு டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி வென்றது. அப்பொழுது ஆஸ்திரேலியா அணியின் கேப்டனாக இருந்தவர் ஆடம் கில்கிறிஸ்ட். இவர்தான் இந்தியாவில் கடைசியாக டெஸ்ட் தொடரை வென்ற ஆஸ்திரேலிய கேப்டன். இவருக்கு முன்னதாக பில் லாரி மட்டும் 1969இல் வென்று இருக்கிறார்.
தற்பொழுது இதற்கு முடிவு கட்ட பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி மும்முரமாக இருக்கிறது. இந்த அணி உடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடு மனக்கசப்பால் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகிய ஜஸ்டின் லாங்கர் தற்பொழுது இந்த அணிக்கு ஆதரவாக சில முக்கிய கருத்துகளை பகிர்ந்து உள்ளார்.