
ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் தொடர்ச்சியான 10 வெற்றிகளை பெற்று உச்சகட்ட செயல்பாடுகளை வெளிப்படுத்திய இந்தியா இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் கோப்பையை தாரை வார்த்தது. அதிலும் ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற அனைத்து வீரர்களும் அபாரமாக விளையாடியும் கடைசியில் கோப்பையை வெல்ல முடியாதது கோடிக்கணக்கான இந்திய ரசிகர்களின் நெஞ்சங்களை உடைத்தது.
இருப்பினும் மனதை தேற்றிக்கொண்டு அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ள 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் பயணத்தை துவங்கியுள்ள இந்தியா மீண்டும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற டி20 தொடரை 4 – 1 (5) என்ற கணக்கில் வென்றது. இதைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விரைவில் இந்தியா களமிறங்குகிறது.
இந்நிலையில் 2024 டி20 உலகக் கோப்பை வெல்வதற்கு டெத் ஓவர்களில் சிறப்பாக செயல்படுவது அவசியம் என்று முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா எச்சரித்துள்ளார். ஏனெனில் தற்போதைய அணியில் பும்ராவை தவிர்த்து பிரசித் கிருஷ்ணா, ஆவேஷ் கான், அர்ஷிதீப் போன்ற இளம் பவுலர்கள் ரன்களை வாரி வழங்குவதாகவும் விமர்சித்துள்ளார்.