
சர்வதேச கிரிக்கெட்டில் முதன்மை அணியாக திகழும் இந்தியாவுக்காக மிக சிறப்பாக விளையாடினால் ரசிகர்களால் ஹீரோவாக கொண்டாடப்படுவதற்கு நிகராக இந்திய அணியில் இடத்தை பிடிப்பதும் அதை தக்க வைத்துக் கொள்வதும் மிகப் பெரிய சவாலாகும். குறிப்பாக இப்போதெல்லாம் சிறப்பாக செயல்பட்டு ஒரு போட்டியில் ஆட்டநாயகன் விருது வெல்லும் வீரர்களுக்கு கூட அடுத்த போட்டியில் விளையாடும் 11 பேர் அணியில் வாய்ப்பு கிடைப்பதில்லை.
அந்தளவுக்கு போட்டி மிகுந்த இந்திய அணியில் தங்களது இடத்தைப் பிடிக்கப் போராடும் பல வீரர்களுக்கு மத்தியில் டெல்லியை சேர்ந்த இளம் கிரிக்கெர் வீரர் பிரிதிவி ஷா ஒருவராக இருந்து வருகிறார். கடந்த 2018 ஐசிசி அண்டர்-19 உலக கோப்பையை கேப்டனாக வென்று கொடுத்து சீனியர் கிரிக்கெட்டில் அறிமுகமான இவர் முன்னாள் வீரர் சேவாக் போல அதிரடியாக விளையாடும் தொடக்க வீரராக தன்னை அடையாளப்படுத்தினார்.
மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுக போட்டியிலேயே சதமடித்த அசத்திய அவரை சச்சின் டெண்டுல்கர், பிரைன் லாரா, விரேந்திர சேவாக் கலந்த கலவை என அப்போதைய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பாராட்டினார். ஆனால் அந்த பாராட்டையும் இடத்தையும் தக்க வைத்துக்கொள்ளும் அளவுக்கு நாளடைவில் தொடர்ந்து சிறப்பாக செயல்படத் தவறிய அவர் சமீப காலங்களில் ஐபிஎல் தொடரிலும் சுமாராகவே செயல்பட்டு வருகிறார்.