
India vs England 1st Test Day 1: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கேப்டன் ஷுப்மன் கில் சதமடித்ததன் மூலம் சுனில் கவாஸ்கர், விராட் கோலி போன்ற ஜாம்பவான்கள் பட்டியலில் இணைந்துள்ளார்.
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஹெடிங்லேவில் உள்ள லீட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஷுப்மன் கில் ஆகியோரது சதத்தின் காரணமாக முதல்நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 359 ரன்களைக் குவித்து வலிமையான நிலையில் உள்ளது.
இந்திய அணி தரப்பில் கேப்டன் ஷுப்மன் கில் 127 ரன்களுடனும், துணைக்கேப்டன் ரிஷப் பந்த் 65 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து அணி தராப்பில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 2 விக்கெட்டுகளையும், பிரைடன் கார்ஸ் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில் இப்போட்டியில் இந்திய அணி கேப்டன் ஷுப்மன் கில் சதமடித்து அசத்தியதன் மூலம் சில சாதனைகளையும் பதிவுசெய்து அசத்தியுள்ளார்.