
Varun Aaron Prediction: இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று இந்த தொடரை 2-2 என்ற கணக்கில் சமன்செய்யும் என முன்னாள் வீரர் வருண் ஆரோன் கணித்துள்ளார்.
லார்ட்ஸில் நடைபெற்ற ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது. மேலும் இப்போட்டியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் ஜூலை 23ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. இப்போட்டியிலும் இங்கிலாந்து அணி வெற்றிபெறும் பட்சத்தில் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றும். இந்திய அணி வெற்றிபெற்றால் தொடரை சமன் செய்யும். இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. மேலும் இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.