
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வெஸ்ட் இண்டீஸ் அணியானது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரானது மே 29ஆம் தேதியும் டி20 தொரானது ஜூன் 06ஆம் தேதி முதலும் நடைபெறவுள்ளது.
இதில் ஒருநாள் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்தது. அதன்படி ஷாய் ஹோப் தலைமையிலான இந்த ஒருநாள் அணியில் நட்சத்திர வீரர்கள் பிராண்டன் கிங், எவின் லூயிஸ், கேசி கார்டி ஆகியோர் மீண்டும் ஒருநாள் அணிக்கு திரும்பியுள்ளனர். அவர்களுடன் அண்டர்19 உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பாட்ட இளம் வீரர் ஆண்ட்ரூ ஜெவெலும் இந்த வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் அணியில் வாய்ப்பு பெற்றுள்ளார்.
இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இங்கிலாந்து ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டனாக ஹாரி புரூக் நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கொண்டு அதிரடி வீரர் வில் ஜேக்ஸ் இரு அணிகளிலும் இடம்பிடித்துள்ள நிலையில், நட்சத்திர ஆல் ரவுண்டர் லியாம் லிவிங்ஸ்டோன் இங்கிலாந்து அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.