
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற இந்தியா ஆரம்பத்திலேயே 2 – 0 (4) என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இதன்மூலம் ஜூலை மாதம் லண்டனில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் வாய்ப்பையும் ஏறத்தாழ உறுதி செய்துள்ளது.
முன்னதாக இத்தொடரில் கடுமையான விமர்சனங்களுக்கு மத்தியில் வாய்ப்பு பெற்று களமிறங்கிய துணை கேப்டன் கேஎல் ராகுல் 20, 15, 1 என மீண்டும் சொற்ப ரன்களில் அவுட்டாகி கொஞ்சமும் முன்னேறாத செயல்பாடுகளை வெளிப்படுத்தினார். கடந்த 2014 ஆம் ஆண்டு அறிமுகமாகி ஆரம்ப காலங்களில் ரொம்பவே தடுமாறிய அவர் 2019 வாக்கில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி நிலையான இடத்தை பிடித்தார்.
ஆனால் நாளடைவில் அதை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக அதிரடியாக செயல்பட வேண்டிய ஓப்பனிங் இடத்தில் தடவலாக செயல்பட்ட அவர் 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் இந்தியாவின் தோல்விக்கு காரணமாக அமைந்தார். அதனால் எழுந்த விமர்சனங்களால் ஒருநாள் கிரிக்கெட்டில் ஓப்பனிங் மற்றும் துணை கேப்டன்ஷிப் பதவியை இழந்த அவருக்கு மிடில் ஆர்டரில் விளையாடும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.