
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று முடிந்த ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது 17 ஆண்டுகளுக்கு பின் சாம்பியன் பட்டம் வென்றது. இதனையடுத்து உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்களுக்கு நேற்றைய தினம் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேற்கொண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வீரர்களை நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார்.
அதன்பின் பிசிசிஐ ஏற்பாடு செய்திருந்த பேரணி மற்றும் பாராட்டு விழாவில் இந்திய அணி வீரர்கள் பங்கேற்றனர். மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த பாராட்டு விழாவில், உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிசிசிஐ தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்த ரூ.125 கோடி பரிசுத்தொகைக்கான காணொளியையும் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா வழங்கினார்.
இந்நிலையில், இந்திய அணி வீரர் ரோஹித் சர்மா கடந்த 2007ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை வெற்றி குறித்தும், நடப்பு டி20 உலகக்கோப்பை வெற்றி குறித்தும் பேசிய காணொளியை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அக்காணொளியில் பேசியுள்ள ரோஹித் சர்மா, “2007 டி20 உலகக்கோப்பையை வென்றது ஒரு வித்தியாசமான உணர்வு. மேலும் அப்போது நாங்கள் இந்த வெற்றி பேரணியை மதியம் தொடங்கினோம், ஆனால் தற்போது இது மாலையில் நடைபெற்றுள்ளது.