
தென் ஆப்பிரிக்க நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது ஏற்கனவே அங்கு நடைபெற்ற டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடரை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள வேளையில் அடுத்ததாக, இரு அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது நடைபெற உள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது நாளை செஞ்சூரியனில் நடைபெறுகிறது.
ஏற்கனவே இந்த சுற்றுப்பயணத்தில் டி20 மற்றும் ஒருநாள் தொடர்கான அணியில் ஓய்வில் இருந்த விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் ஜஸ்ப்ரீத் பும்ரா போன்ற முன்னணி வீரர்கள் மீண்டும் விளையாட இருப்பதினால் இந்த தொடரானது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதோடு கடந்த 1992-ஆம் ஆண்டு முதல் தென் ஆப்பிரிக்க நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இந்திய கிரிக்கெட் அணியானது இதுவரை ஒரு முறை கூட அங்கு நடைபெற்ற டெஸ்ட் தொடரை கைப்பற்றியதில்லை. எனவே இம்முறை நிச்சயம் தென் ஆப்பிரிக்க நாட்டில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி சாதனை படைக்கும் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.